பொருளடக்கம்
- இல்லத்தரசிகளால் வீட்டு பொறுப்புகளுடன் தொழிலிலும் ஈடுபட முடியமா?
- ஏன் இல்லத்தரசிகள் தொழில் தொடங்க வேண்டும்?
- திறமையை பயன்படுத்துதல்
- அங்கீகாரம், அடையாளம் பெறுதல்
- நிதி தேவையை பூர்த்தி செய்தல்
- நிதி சுதந்திரம்
- சமூக வளர்ச்சி
- வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய தொழில்கள்
- தயாரிப்புகள்
- டெய்லரிங் & பொட்டிக் (Boutique)
- வகுப்புகள் எடுத்தல்
- கிளவுட் கிச்சன், வீட்டு தயாரிப்பு உணவு பொருட்கள் மற்றும் டிஃபன் சர்வீஸ்
- ஃப்ரீலான்சிங் (Freelancing)
- துணிகள் மொத்த வியாபாரம்
- பியூட்டி பார்லர்
- பூ மாலைகள்
- ஆன்லைன் சேவைகள் (Online Services)
- பேக்கிங் தொழில்
- Daycare Center
- யூடியூப் சேனல் (YouTube Channel)
- வீட்டில் இருந்தே தொழில் செய்ய ஏற்ற சூழல்! தவறவிடாதீர்கள்!!
இல்லத்தரசிகளால் வீட்டு பொறுப்புகளுடன் தொழிலிலும் ஈடுபட முடியமா?
குடும்ப பொறுப்புகளைப் பக்குவமாகவும், பொறுமையாகவும் கையாளும் திறமைகள் கொண்டவர்கள் பெண்கள் என்பது காலம் காலமாக அனைவரும் அறிந்த விஷயம். அதனால் தான் குடும்ப பொறுப்பினை ஏற்று இருக்கும் பெண்களை இல்லத்தரசிகள் என அழைக்கிறோம். ஓர் நாட்டினை, நாட்டின் மக்களை எவ்வாறு ஒரு அரசி சாமர்த்தியமாக தன் கண்ணை போன்று பாதுகாத்து செழிக்க செய்வாரோ, அது போல இல்லங்களில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் நலன், ஆரோக்கியம், வளர்ச்சி, மகிழ்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தி மொத்த குடும்பத்தையும் பேணி காப்பவர்கள் தான் இல்லத்தரசிகள். தன்னலத்தினை விடவும் பெரிதாக குழந்தைகள் மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவரின் நலத்தினையும் பேணி பாதுகாக்கும் பொறுப்பு இல்லத்தரசிகள் இடத்தில் இருக்கிறது.
குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் படிப்பு, வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல்நலம், அவர்களுக்கு தேவையான உதவிகள், கவனிப்புகள் போன்ற எண்ணற்ற பொறுப்புகளாலும், நேரசிக்கல்கள், பயணங்கள் போன்ற பல காரணங்களால் எல்லா பெண்களாலும் வேலைக்கு வெளியே செல்ல முடிவதில்லை. தங்களது வீட்டு பொறுப்புகளுக்கான நேரம் போக, கிடைக்கும் நேரத்தில் தொழில் செய்வதற்கான வாய்ப்பு இருந்தால், இல்லத்தரசிகள் தொழில் செய்ய விரும்புவார்களா? என்றால், ஏன் இல்லை? நிச்சயமாக விரும்புகிறார்கள்.
பெண்கள் தங்களுக்கு கிடைக்கும் நேரத்தினை பயனுள்ளதாகவும், இலாபம் தரக்கூடியதாகவும், தங்களின் திறமைகளையும் பயன்படுத்தவும் மேம்படுத்தி கொள்ளவும், புதிய திறமைகளை கற்று கொள்ளவும், தங்களுக்கான ஓர் அடையாளத்தை பெறவும் வீட்டில் இருந்தபடியே இல்லத்தரசிகள் தொழில் தொடங்கி பயன்பெற பல வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன.
ஏன் இல்லத்தரசிகள் தொழில் தொடங்க வேண்டும்?
குடும்பத்தில் ஒருவரோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவரோ குடும்ப தேவைகளுக்கான நிதி தேவையை பூர்த்தி செய்ய, பணிக்கு செல்லுதல் அல்லது ஏதேனும் தொழிலில் ஈடுபடுதல் என ஒன்றை தேர்ந்தெடுத்து கொண்டு, குடும்ப பொறுப்புகளை வீட்டு பெண்களிடம் வழங்குகிறார்கள்.
இப்படி இருக்க, குடும்பத்துக்கு தேவையான நிதியினை மற்ற குடும்ப உறுப்பினர்கள் சம்பாதித்து தரும் போது, இல்லத்தரசிகள் எதற்கு தனி தொழில் செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்டால், அதற்கான பதில்களை இந்த பகுதியில் பார்க்கலாம் வாங்க.
திறமையை பயன்படுத்துதல்: இன்றைய பெண்கள் அனைவரும் படித்தவர்கள். பல திறமைகள் கொண்டு இருப்பவர்கள். பெண்கள் தாங்கள் படித்த படிப்பு, அவர்கள் கொண்டு இருக்கும் மற்றும் வளர்த்து கொண்ட திறமைகள் அனைத்தும் வீண் போகாமல், அவற்றை உபயோகமாக பயன்படுத்தி கொள்ள தொழில் செய்ய விரும்புகிறார்கள்.
தொழில் செய்வதன் மூலம் பலதரப்பட்ட விஷயங்களை பெண்கள் தெரிந்து கொள்கிறார்கள். வரும் சவால்கள், சாத்தியங்கள் குறித்து நல்ல ஒரு புரிதலும், அனுபவமும் அவர்களுக்கு கிடைக்கிறது. பல வாழ்க்கை பாடங்களையும் உலகியலையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கிறது.
அங்கீகாரம், அடையாளம் பெறுதல்: வீட்டு பொறுப்புகளில் மட்டுமில்லாமல், தொழிலிலும் சாமர்த்தியமாக வெற்றி பெறும் பெண்கள் உலகில் தங்களுக்கான ஓர் அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் பெறுகின்றனர். குடும்பம் தாண்டி வெளிஉலகிலும் அவர்களுக்கு ஓர் மதிப்பும், மரியாதையும், அடையாளமும் கிடைக்கிறது.
நிதி தேவையை பூர்த்தி செய்தல்: வீட்டு பொறுப்புகளுடன் பெண்கள் தொழில் செய்வதால், பெறப்படும் இலாபம் மூலம் குடும்பம் மேலும் வளரும். அடுத்த நிலைக்கு உயர உதவியாக இருக்கும். குழந்தைகளின் மேற்படிப்பு, வீடு உள்ளிட்ட சொத்துகள் வாங்க, இதர வசதிகளை ஏற்படுத்தி கொள்ள, வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள உதவும். ஒரு வேளை குடும்பத்தில் மற்ற குடும்ப உறுப்பினர்கள் சம்பாதிக்கும் பணம், குடும்ப தேவைகளுக்கு போதுமானதாக இல்லாத நிலை இருக்கலாம். இச்சூழ்நிலையில் பெண்கள் வீட்டு பொறுப்புகளை பார்த்த படியே, வீட்டில் இருந்து கொண்டே தொழில் செய்வது, குடும்ப நிதி தேவைகளுக்கு பேருதவியாக இருக்கும்.
நிதி சுதந்திரம்: அதோடு மட்டுமில்லாமல், பெண்கள் தங்களுக்கு தேவையான செலவுகளுக்கு குடும்ப உறுப்பினர்களை சார்ந்து இருக்கும் நிலை மாறும். இல்லத்தரசிகள் அவர்களது தனிப்பட்ட தேவைகள், செலவுகள், விருப்பங்களை நிறைவேற்றி கொள்ள தேவையான நிதி சுகந்திரத்தினை பெறுகிறார்கள்.
சமூக வளர்ச்சி: சென்ற நூற்றாண்டோடு ஒப்பிடும் போது, பெண்கள் அதிக அளவில் அனைத்து துறைகளிலும் கால் ஊன்றி இருக்கிறார்கள். இதன் மூலம் பெண்களை அடிமைப்படுத்துதல், தாழ்வாக பார்க்கும் மனநிலை பெரிதும் மாறி இருக்கிறது.
அதனால் வீட்டு பொறுப்புகள் மிக முக்கியம் என்றாலும், வீட்டில் இருந்தபடியே இல்லத்தரசிகள் தொழில் செய்வது நாட்டிற்கும், வீட்டிற்கும், நாம் வாழும் சமூகத்திற்கும் நல்லதே ஆகும்.
வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய தொழில்கள்
இன்றைய டிஜிட்டல் உலகம் வீட்டில் இருந்தபடியே, குறைந்த முதலீட்டில் அல்லது முதலீடே இல்லாமல் கூட தொழில் தொடங்க பல வழிகள், வாய்ப்புகளை அள்ளி வழங்குகிறது. வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய தொழில்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அவற்றில் இல்லத்தரசிகளுக்கு ஏற்ற சிலவற்றை காணலாம்.
தயாரிப்புகள்: குறைந்த முதலீட்டில் மூலபொருட்களை வாங்கி பலதரப்பட்ட எளிமையான பொருட்களை இல்லங்களிலே பெண்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்வதன் மூலம் அதிக இலாபம் பெற முடியும். அவைகள்:
- நகைகள் தயாரிப்பு
- மெழுகுவர்த்தி தயாரிப்பு
- சோப்பு தயாரிப்பு
- பரிசு பொருட்களுக்கான கூடைகள் தயாரிப்பு (Gift Baskets)
- சணல் பைகள் தயாரிப்பு (Jute Bags)
- பேப்பர் பேக்குகள்
- முககவசம் (Mask) தயாரிப்பு
- ஹேண்ட் சானிடைசர் தயாரிப்பு
- கைவினை பொருட்கள் தயாரிப்பு (Handicrafts)
- பொட்டு தயாரிப்பு
- ஹேர் பேண்ட்கள் தயாரிப்பு
- பொம்மைகள் தயாரிப்பு
இது போன்ற பல பொருட்களை எளிதாக குறைந்த முதலீட்டில் உற்பத்தி செய்யலாம். சிறிய அளவில் பொட்டு தயாரிப்பில் உங்களுக்கு தேவையான முதன்மையான பொருட்கள் வெல்வெட் துணியும், பசையும் தான். மேலும் அலங்கரிக்க, சிறிய பாசிகள், கற்கள் தேவை. இதே பாசிகள், கற்களை நூலால் கோர்த்து அழகிய பாசிகள், இதர அணிகலன்களும் செய்து எளிதாக விற்பனை செய்யலாம்.
டெய்லரிங் & பொட்டிக் (Boutique):
தையல் மெஷின் ஒன்று உங்களிடம் இருந்தால் போதும். நீங்கள் ஃபேஷன் டிசைனிங் படித்து இருக்க வேண்டியதில்லை. உங்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள டெய்லரிங் பயிற்சி மையங்கள் சென்று ஓரிரு மாதங்களில் டெய்லரிங் கற்று நல்ல இலாபம் பெறலாம். கல்யாணம் போன்ற விசேஷசங்களுக்கு தைத்து கொடுக்கும் ஒரு ப்ளவுஸ்க்கே ஆயிரங்களில் சம்பாதிக்க முடியும். ஆரி வொர்க்கள் செய்து கொடுப்பதன் மூலம் மேலும் அதிகம் சம்பாதிக்க முடியும். டெய்லரிங் மற்றும் ஆரி வகுப்புகள் போன்றவற்றையும் ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவோ அல்லது யூடியூப் பார்த்தும் எளிதாக கற்று கொள்ளலாம்.
நீங்கள் ஃபேஷன் டிசைனிங் பற்றி கற்று இருந்தால், விதவிதமான டிசைன்கள், வாடிக்கையாளர்கள் கேட்கும் விதம் டிசைன் செய்யக்கூடியவராக இருந்தால் வீட்டிலேயே சிறிய இடம் ஒதுக்கி பொட்டிக் (Boutique) அமைக்கலாம். ஆன்லைன் பொட்டிக் மூலமும் வியாபாரம் செய்யலாம்.
வகுப்புகள் எடுத்தல்:
உங்கள் வீட்டிலேயும், ஆன்லைனிலும் உங்களது திறமைக்கேற்ப வகுப்புகள் எடுக்கலாம்.
- சமையல் வகுப்புகள்
- பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பாடத்திட்ட வகுப்புகள்
- ஸ்போக்கென் இங்கிலீஷ் வகுப்புகள்
- பிற மொழிகள் கற்பிக்கும் வகுப்புகள்
- இசை வகுப்புகள்
- நாட்டிய வகுப்புகள்
- போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வழங்கும் வகுப்புகள்
இது போன்று நீங்கள் எந்த துறையில் திறன் பெற்று இருக்கிறீர்களோ, அத்துறை சார்ந்த வகுப்புகளை எடுக்கலாம்.
கிளவுட் கிச்சன் (Cloud Kitchen), வீட்டு தயாரிப்பு உணவு பொருட்கள் மற்றும் டிஃபன் சர்வீஸ்:
தற்போது கிளவுட் கிச்சன் பிரபலமாகி வருகிறது. உங்களது கைபக்குவத்தை மற்றும் சமையல் திறமையை பயன்படுத்தி அதனையே தொழிலாகவும் செய்து கொள்ள முடியும். Swiggy, Zomato போன்று ஆன்லைன் ஆர்டர் மூலம் டோர் டெலிவரி செய்யும் அமைப்புகள் இருப்பதால், உங்களது கிளவுட் கிச்சனை எளிதாக அமைத்து கொள்ளலாம்.
வீடுகளில் சுத்தமாகவும், பிற இரசாயனங்கள் ஏதும் கலக்காமலும் செய்யப்படும் உணவு பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. உங்கள் வீட்டிலே ஊறுகாய்கள், மசாலாக்கள், ஆரோக்கியமான தின்பண்டங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம்.
பல வீடுகளில் உள்ள சமைக்க முடியாத பெரியவர்கள், வெளியூரில் வேலை செய்பவர்கள் மற்றும் படிப்பவர்கள் என பல தரப்பட்ட மக்கள் ஹோட்டல் உணவுகளை தவிர்த்து, வீட்டு சாப்பாடு சாப்பிடவே விரும்புகிறார்கள். உங்கள் இல்லங்களில் வீட்டு சாப்பாடு சமைத்து விற்பனை செய்யலாம். டோர் டெலிவரி செய்யலாம்.
ஃப்ரீலான்சிங் (Freelancing):
உங்களது திறமைகேற்ப கட்டுரைகள் எழுதுதல் (Articles writing), Blogging, கிராஃபிக் டிசைன் (Graphic Design), டிஜிட்டல் மார்க்கெட்டிங், மொழிபெயர்ப்பு, சரிபார்த்தல் (Proofreading), கோடிங் (Coding), ஆப் டெவலப்மென்ட் (App Development), டேட்டா என்ட்ரி (Data Entry) போன்ற வேலைகளை ஒரு புராஜக்ட்டாக குறிப்பிட்ட அளவு எடுத்து, குறிப்பிட்ட காலத்தில் செய்து கொடுத்து சம்பாதிக்கலாம். ஃப்ரீலான்சிங்கிற்கான இணையதளங்கள் பல உள்ளன. அவற்றின் மூலம் பயன்பெற முடியும்.
துணிகள் மொத்த வியாபாரம்:
பெரு நகரங்களில் உள்ள எடுத்துக்காட்டாக டெல்லி சதர் பஜார் போன்ற மொத்த வியாபார சந்தைகளில் இருந்து மிக குறைந்த விலையில் சேலைகள், சுடிதார்கள் போன்ற துணி வகைகளை கொள்முதல் செய்து வந்து உங்கள் இல்லங்களிலே நல்ல விலைக்கு விற்பனை செய்து நிறைய இலாபம் பெற முடியும்.
பியூட்டி பார்லர்:
நீங்கள் பியூட்டிசியன் கோர்ஸ் படித்து இருந்தால், பியூட்டிசியனாக பயிற்சி பெற்று இருந்தால் உங்கள் வீட்டிலேயே சிறிய அளவில் பியூட்டி பார்லர் அமைத்து சம்பாதிக்கலாம். மேலும் கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு நேரில் சென்று அலங்காரம் செய்து கொடுத்து சம்பாதிக்க முடியும்.
பூ மாலைகள்:
உங்கள் பகுதியில் உள்ள பூ மார்க்கெட்டில் இருந்து பூக்களை வாங்கி விதவிதமான முறையில் அழகான மாலைகள், சிகை அலங்கார பூக்கள் டிசைன்கள் செய்து கோவில்கள், கல்யாணம் போன்ற விசேஷங்கள், அருகில் உள்ள பூக்கடைகள் போன்றவற்றிற்கு விற்பனை செய்யலாம்.
ஆன்லைன் சேவைகள் (Online Services):
ஆன்லைன் சர்வே, Virtual Assistant, Affiliate Marketing, Drop shipping மூலம் ஆன்லைனில் சம்பாதிக்க முடியும். Drop shipping முறையில் நீங்கள் எந்தவொரு பொருளையும் வாங்கி சேமித்து வைத்து விற்பனை செய்ய வேண்டியதில்லை. இ-காமர்ஸ் தளங்கள் மூலம் எளிதாக ஆர்டர் எடுத்து, அதனை உற்பத்தியாளர்/ விநியோகஸ்தர்கள்/ வியாபாரிகளுக்கு அனுப்பி விட்டால், அவர்கள் பொருட்களை வாங்குபவர்களுக்கு அனுப்பி விடுவார்கள்.
நீங்கள் blogging உள்ளிட்டவைகளை கொண்ட வெப்சைட்டை வைத்து இருந்தால், அதில் விளம்பரங்களை அமைப்பதன் மூலம் இலாபம் பெற முடியும். அந்த விளம்பரங்களை கிளிக் செய்து மக்கள் பொருட்கள் வாங்கும் போது உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். இதனை தான் Affiliate Marketing என்பர். உங்களுக்கான வெப்சைட்டில் மட்டுமில்லாது யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களிலும் இந்த விளம்பரங்களுக்கான லிங்க்குளை இட்டு சம்பாதிக்க முடியும்.
புக் கீப்பிங் (Book Keeping), Accounting போன்ற ஒரு நிறுவனத்தின் operation தொடர்புடைய வேலைகளை நிறுவனங்கள் அவுட்சோர்சிங் செய்கின்றனர். இது போன்ற Virtual Assistant ஆகவும் சம்பாதிக்க முடியும்.
பேக்கிங் தொழில்:
பேக்கிங் கற்று இருக்கிறீர்கள் என்றால், தாராளமாக குறைந்த முதலீட்டில் உங்கள் இல்லங்களிலேயே கேக், கப் கேக், பிஸ்கட் போன்ற பேக்கரி பொருட்களை தயார் செய்து விற்பனை செய்யலாம். ஆர்டர்கள் எடுத்து செய்து கொடுக்கலாம். பேக்கிங் புதிதாக கற்று கொள்ள விரும்புபவர்களும் எளிதாக ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஓரிரு மாதங்களில் கற்று கொள்ள முடியும்.
Daycare Center:
வேலைக்கு செல்லும் தம்பதியர்கள் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக பகல் வேளைகளில் பார்த்து கொள்ளும் Daycare Center களில் விட்டு செல்கின்றனர். உங்கள் வீட்டிலே Daycare Center தொழிலை செய்யலாம். உங்கள் இல்லங்களில் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கும் விளையாட குழந்தைகள் கிடைப்பார்கள்.
யூடியூப் சேனல் (YouTube Channel):
யூடியூப் சேனல்கள் மூலம் பலரும் பல இலட்சங்களில் சம்பாதித்து வருகின்றனர். சமையல் வீடியோக்கள், பல துறை சார்ந்த தகவல்கள் தரும் வீடியோக்கள், கற்பிக்கும் வீடியோக்கள் என பலதரப்பட்ட வகையிலான வீடியோக்களை பதிவேற்றி சம்பாதிக்க முடியும்.
வீட்டில் இருந்தே தொழில் செய்ய ஏற்ற சூழல்! தவறவிடாதீர்கள்!!
எனவே வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய தொழில்கள் ஏராளமாக உள்ளன. குறைந்த முதலீடே போதுமானது. சிறிய அளவிலான தொழில் தொடங்குபவர்களுக்கு உதவிட அரசாங்கத்தால் பல திட்டங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. அவற்றின் மூலமும் பயன்பெறலாம். மேலும் பெண் தொழில் முனைவோர்களுக்கும் உதவிட தனி திட்டங்கள் உள்ளன. சில தொழில்களுக்கு முதலீடே தேவைப்படாது. ஆதலால் வாய்ப்புகள் குவிந்து உள்ளன. தடைகள் ஏதும் இல்லை. உங்களது ஆர்வமும் உழைப்பும் தான் நீங்கள் செலுத்த வேண்டிய முதன்மையான முதலீடு. இல்லத்தரசிகள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே தொழில் செய்து வாழ்வில் மென்மேலும் முன்னேறுங்கள்.