பொருளடக்கம்
- அறிமுகம்
- முந்திரிக்கொட்டை தயாரிப்பில் இந்தியாவின் பங்கு
- முந்திரிக்கொட்டை எப்படி கிடைக்கிறது?
- முந்திரியில் உள்ள சத்துகள்
- முந்திரிக்கொட்டையினை பிரித்தெடுக்கும் தொழிலின் தன்மைகள்
- முந்திரிக்கொட்டை சார்ந்த தொழில் வாய்ப்புகள்
- இயற்கையாக பெறப்படும் முந்திரிக்கொட்டை விற்பனை
- முந்திரிபருப்பு விற்பனை
- முந்திரிக்கொட்டை உடைக்கும் தொழில்
- முந்திரிபருப்பின் தோலுரித்தல்
- முந்திரிக்கொட்டையின் தோலில்/ஓட்டில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்
- முந்திரிக்கொட்டையின் ஓடானது ஒரு எரிபொருள்
- மேல்தோல்
- தூசி
- முந்திரி பழம்
- முடிவுரை
அறிமுகம்
அனைத்து பருவங்களிலும் அதிக தேவை கொண்ட ஓர் உணவு பொருளாக முந்திரி விளங்குகிறது. முந்திரிக்கொட்டையானது மிகவும் பிரபலமான உலர் பழமாக மட்டுமல்லாமல் இனிப்புகள், புலாவ், கிரேவி போன்ற உணவுகளின் சமையலிலும், உணவுப் பொருட்களில் மேல் அலங்காரம் செய்ய பயன்படும் ஒரு பொருளாகவும் உள்ளது.
வர்த்தக ரீதியாக இந்தியாவின் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, ஒரிசா, கர்நாடகா, கோவா, ஆந்திர பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் விளைவிக்கப்படுகிறது. ஆதலால் இந்தியாவில் முந்திரி தொடர்பான தொழில்கள் பெரிதும் விரும்பி தேர்ந்தெடுக்கப்படும் தொழில்களில் ஒன்றாகவும், குறிப்பாக மிகவும் வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஓர் தொழிலாகவும் உள்ளது.
முந்திரிக்கொட்டை தயாரிப்பில் இந்தியாவின் பங்கு
உலக அளவில் முந்திரிக்கொட்டை தயாரிப்பில் இந்தியா முன்னணி வகிக்கிறது. உலக அளவில் முந்திரிக்கொட்டை தயாரிப்பில் இந்தியாவின் பங்களிப்பு 70 சதவிகிதமாகும். இந்தியாவில் அதிக அளவில் முந்திரிக்கொட்டை தயாரிப்பில் ஈடுபடும் மாநிலம் கேரளா ஆகும். இங்கு தினந்தோறும் முந்திரிக்கொட்டை பிரித்தெடுக்கும் வேலைகள் நடைபெறுகின்றன. முந்திரிக்கொட்டை தயாரிப்பில் ஈடுபடும் அமைப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு கேரளாவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவை பிற மாநிலங்களில் பரவலாக காணப்படுகின்றன. ஒடிசா ஆனது அதிக அளவில் முந்திரிக்கொட்டை தயாரிப்பு செய்வதில் மூன்றாவது இடம் வகிக்கிறது.
முந்திரி மரமானது ஒரு வெப்பமண்டல பகுதியில் வளரக்கூடிய பசுமையான மரவகை என்பதால் ஆண்டு முழுவதும் முந்திரிக்கொட்டைகள் கிடைத்த வண்ணம் இருக்கும். உண்மையில் முந்திரி மரத்தின் தாயகம் பிரேசில் ஆகும். பின்னர் அங்கிருந்து மொசாம்பிக் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் போர்ச்சுக்கீசியர்களால் மண்ணரிப்பைத் தடுக்க இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது.
முந்திரிக்கொட்டை எப்படி கிடைக்கிறது?
முந்திரிக்கொட்டை அல்லது விதையானது சற்றே வித்தியாசமானது. பிற பழங்களில் உள்ளது போல் விதையானது பழத்தின் உள்ளே காணப்படுவதில்லை. முந்திரிப் பழத்தின் வெளியே, அதன் தோலில் முந்திரிக்கொட்டை அல்லது விதையானது இணைந்திருக்கும். முதிர்ச்சிக்கு பின்னர் பழமானது முந்திரிக்கொட்டையுடன் சேர்த்து தரையில் விழுந்தப்பின், அவை சேகரிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு பின்னர் பிரித்தெடுக்கப்படும் முந்திரிக்கொட்டையானது பயன்பாட்டுக்கு ஏற்றப்படி தயார் செய்யப்படும்.
முந்திரி பழம் இனிப்புத்தன்மை கொண்டது. இப்பழமானது கோவாவில் மிகவும் பிரசித்தி பெற்ற புளிக்க வைக்கப்பட்ட ஒரு பானமான பெனி தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
முந்திரியில் உள்ள சத்துகள்
முந்திரிக்கொட்டையில் 22% கார்போஹைட்ரேட், 47% கொழுப்பு, மற்றும் 21.2% புரதமும் உள்ளது. மேலும் கால்சியம், பாஸ்பரஸ், மற்றும் இரும்பு உள்ளிட்ட கனிமங்களும் காணப்படுகின்றன. காலை உணவுடன் உட்கொள்ளப்படும் தானியங்களுடனும், மிட்டாய் தயாரிப்பிலும், ஆரோக்கியமான உணவுகளிலும், பேக்கரி உணவுகளிலும், சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்களாலும் அதிக அளவில் முந்திரிக்கொட்டை பயன்படுத்தப்படுகிறது.
புரதம், கொழுப்பு போன்றவை அதிகம் கொண்ட முந்திரிக்கொட்டையானது பொட்டாஸியம், கால்சியம், இரும்பு போன்றவைகளையும், அதிக அளவில் பல்நிறைவுறா கொழுப்பு அமிலங்களான (Polyunsaturated Fatty Acids) லினோலிக் போன்ற கொழுப்பு அமிலங்களையும் கொண்டு உள்ளது.
முந்திரியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்கள்
முந்திரியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மூன்று முதன்மையான பொருட்கள்
- முந்திரிக்கொட்டை
- முந்திரி பருப்பு
- முந்திரிக்கொட்டை தோலில் இருந்து பெறப்படும் எண்ணெய்
முந்திரிக்கொட்டையினை பிரித்தெடுக்கும் தொழிலின் தன்மைகள்
முந்திரிக்கொட்டைப் பிரித்தெடுக்கும் செயலானது பெரும்பாலும் பணியாட்கள் கொண்டே செய்யப்படுகிறது. ஆதலால் இத்தொழிலுக்கு நிறைய தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள். முன்பு முந்திரிக்கொட்டை பிரித்தெடுக்கும் தொழிலானது சீர்ப்படுத்தப்பட்ட ஒன்றாக இல்லை என்ற போதிலும், தற்போது உள்ள தொழில் முனைவோர்கள் இத்தொழிலை நன்கு சீர்படுத்தி ஒரு ஒழுங்குமுறையின் மூலம் இலாபம் ஈட்டி வருகின்றனர். இத்தொழிலில் பங்குபெறும் பணியாளர்களில் 90 சதவிகிதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முந்திரிக்கொட்டைப் பிரித்தெடுக்கும் செயலானது சற்று நேரம் எடுக்கக்கூடிய ஒன்றாக இருப்பினும் அதனையும் விரைவாக முடிக்கக்கூடிய வகையில் சிறிய அளவிலான இயந்திரங்களும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. முந்திரிக்கொட்டை பிரித்தெடுக்கும் தொழிலானது நீண்டநாள் இலாபம் ஈட்டு தரக்கூடிய ஒரு தொழிலாகும். முந்திரிக்கான தேவை என்றும் தொடர்ந்து இருந்து வரும்போது இத்தொழில் என்றுமே வெற்றிக்கரமானதாகவும், இலாபம் ஈட்டக்கூடியதாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கொரானா ஊரடங்கு காலத்தில் கூட, முந்திரி தொழில் வேகமாக வளர்ந்தது, இத்தொழிலின் நிலைத்தன்மையை காட்டுகிறது.
முந்திரிக்கொட்டை சார்ந்த தொழில் வாய்ப்புகள்
உலகம் முழுவதும் முந்திரிபருப்பிற்கான தேவையும் மதிப்பும் அதிக அளவில் உள்ளது. முந்திரிபருப்பு சார்ந்த தொழிலில் முந்திரிபருப்பினால் மட்டுமின்றி அதில் கிடைக்கும் துணைப்பொருட்கள் மூலமும் நல்ல இலாபம் ஈட்ட முடியும். அறுவடை முதல் முந்திரிக்கொட்டை உள்ளிட்ட துணைப்பொருட்களின் விற்பனை வரை உள்ள முந்திரிக்கொட்டை சார்ந்த தொழில் வாய்ப்புகள் குறித்து காணலாம்.
1. இயற்கையாக பெறப்படும் முந்திரிக்கொட்டை விற்பனை
முந்திரிக்கொட்டை என்பது ஓடு அல்லது தோல் நீக்கப்படாத ஒன்றாகும். உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் செயல்முறைப்படுத்தப்பட்ட முந்திரிக்கொட்டைகள் சந்தைப்படுத்தப்படுகின்றன. முந்திரிக்கொட்டைகளை அறுவடை செய்பவர்களிடம் இருந்து நேரடியாக பெற்றும், அல்லது வாய்ப்பு இருப்பின் நீங்களே அறுவடை செய்தும் முந்திரிக்கொட்டைகளை சந்தைப்படுத்தலாம்.
2. முந்திரிபருப்பு விற்பனை
முந்திரிபருப்பு என்பது ஓடு/தோல் நீக்கப்பட்ட விதை ஆகும். முந்திரிக்கொட்டையின் உட்பகுதியில் தோலின் உள்ளே காணப்படும் இந்த விதைதான் உணவுத்துறையில் மேல் தோல் நீக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
சந்தைப்படுத்தப்படும் முந்திரிபருப்புகளில் 60% ஆனது தின்பண்டங்கள் உள்ளிட்ட உணவுபொருட்கள் தயாரிப்பிலும், 40% ஆனது மிட்டாய், சாக்லேட் போன்ற சர்க்கரை சார்ந்த இனிப்புகள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது.
3. முந்திரிக்கொட்டை உடைக்கும் தொழில்
அறுவடைக்கு பின்பு கிடைக்க பெறும் முந்திரிக்கொட்டைகளில் இருந்து முந்திரி பருப்புகளைப் பிரித்தெடுக்கும் தொழில் அமைப்புகள் அமைக்கலாம். அதன் மூலம் பெறப்படும் துணை பொருட்கள் மூலமும் இலாபம் ஈட்ட முடியும்.
சந்தை மற்றும் விவசாயிகளிடம் இருந்து முந்திரிக்கொட்டை மூட்டைகளை வாங்கி தொழில் செய்யலாம். 80 கிலோ கொண்ட ஒரு மூட்டையின் விலை 7 முதல் 14 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும். முந்திரிக்கொட்டை உடைக்கும் தொழில் செய்ய முதலீடு 5 முதல் 30 இலட்சம் வரை தேவைப்படும்.
முந்திரிக்கொட்டைகளை உடைக்கும் முன்னர், நெல் போன்று வேக வைக்க வேண்டும். இதற்கென வேகவைக்கும் இடங்களில் கொடுத்து வேகவைத்து கொள்ளலாம். வேகவைத்த பின்னர், உங்கள் வீடுகளிலே தனியாக கூரை அமைத்தோ அல்லது தனிஇடம் பார்த்து அமைத்தோ முந்திரிக்கொட்டையை உடைக்கும் வேலையினை மேற்கொள்ளலாம். இல்லையேல் வீடுகளில் முந்திரிக்கொட்டை உடைப்பவர்களிடத்தில் மூட்டைகளை கொண்டு போய் கொடுத்து உடைக்க சொல்லி பின்னர் வாங்கி கொள்ளலாம்.
கிராமங்களில் பெரும்பாலும் பெண்கள் இவ்வேலையில் ஈடுபடுகின்றனர். சிறு கற்கள் உபயோகப்படுத்தி வேக வைத்த முந்திரிக்கொட்டையினை உடைக்கின்றனர். ஒரு தனிநபரால் ஒரு நாளைக்கு 30 கிலோ முந்திரிக்கொட்டையினை உடைக்க முடியும். ஒரு நபர் மட்டும் கையாளக்கூடிய முந்திரிக்கொட்டை உடைக்கும் இயந்திரம் உள்ளது. இவ்வியந்திரத்தின் மூலம் ஒரு நாளைக்கு ஒரு நபரால் 80 கிலோ வரையிலான முந்திரிக்கொட்டையினை உடைக்க முடியும்.
முந்திரிக்கொட்டையின் தோலில் காணப்படும் பீனால் எனும் வேதிபொருள் அமிலம் போன்று ஆபத்தானது. நம் உடலில் பட்டால், அப்பகுதி வெந்துவிடும். வேகவைத்து உரிக்கும் போது பீனாலின் வீரியம் குறைவாக இருக்கும். மேலும் முந்திரிக்கொட்டை உடைக்கும் பணியாளர்கள் பீனாலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள, கை மற்றும் ஆடைகளின் மீது சாம்பல் தடவிக்கொண்டு முந்திரிக்கொட்டை உடைக்கும் தொழிலில் ஈடுபடுவர். முந்திரிக்கொட்டை உடைக்கும் பணியாளர்களுக்கான சம்பளம் ஒரு நாளைக்கு 500 ரூபாய் என்ற வீதம் உள்ளது.
4. முந்திரிபருப்பின் தோலுரித்தல்
முந்திரிக்கொட்டையில் இருந்து முந்திரி விதை அல்லது பயிர் உடைத்து எடுக்கப்பட்டவுடன், முந்திரிபயிர் அல்லது விதை மற்றும் உடைக்கப்பட்ட தோலும் இருக்கும்.
முந்திரிக்கொட்டையினை உடைத்து எடுக்கப்பட்ட முந்திரிபயிரின் மீது உள்ள சிறு தோலினையும் அடுத்து பிரித்து எடுத்தால் தான் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் முந்திரி பருப்பு கிடைக்கும்.
இந்த சிறு தோலினை பிரித்தெடுக்க, இவற்றினை அனலில் வைப்பர். இதற்கு பெயர் போர்மா என்பர். இவ்வாறு போர்மா செய்வதால் தோல் உரிப்பது மிகவும் இலகுவானதாக இருக்கும். பணியாட்கள் மூலம் தோல் உரிக்க வேண்டும். இதற்கும் கூலி தனியாக வழங்க வேண்டும்.
உடைத்தெடுக்கப்பட்ட முந்திரி பயிரினை வாங்கி, போர்மாக்கு உட்படுத்தி தோல் உரித்து பயன்பாட்டிற்கான முந்திரி பருப்பினை பெறும் இந்த அமைப்பினை ஏற்படுத்தி, இதனையும் தனி ஒரு தொழிலாக செய்யலாம்.
5. முந்திரிக்கொட்டையின் தோலில்/ஓட்டில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்
முந்திரிக்கொட்டையினை உடைக்கும் போது கிடைக்கும் இந்த முந்திரி பயிரினைச் சுற்றிக்காணப்படும் ஓடானது தேன்கூடு போன்ற அமைப்புடன் ஒன்று முதல் எட்டு அங்குலம் கொண்டு இருக்கும். இது மென்மையானதாகவும், பிசுபிசுப்பு தன்மை கொண்டதாகவும் இருக்கும்.
இந்த ஓட்டினை எரித்து எண்ணெய் எடுப்பர். இந்த எண்ணெய் ஆனது பேப்பர் மை, ஜவுளி, அழகுபொருட்கள், மருந்துகள் தயாரிப்பு போன்றவற்றில் பயன்படுகிறது.
ஆதலால் முந்திரிக்கொட்டை உடைப்பவர்களிடம் இருந்து ஓட்டினை வாங்கி எண்ணெய் உற்பத்தி செய்யும் ஓர் தனி தொழிலாகவும் செய்ய முடியும். முந்திரிக்கொட்டை உடைக்கும் தொழில் செய்பவர்களே, கிளைத்தொழிலாக எண்ணெய் எடுப்பதிலும் ஈடுபடலாம்.
6. முந்திரிக்கொட்டையின் ஓடானது ஒரு எரிபொருள்
முந்திரிக்கொட்டையின் ஓட்டில் இருந்து எண்ணெய் எடுப்பது மட்டுமில்லாமல், இதனை ஓர் எரிபொருளாகவும் பயன்படுத்த முடியும். ஆம். இந்த முந்திரிக்கொட்டையின் ஓட்டினை விறகுக்கு பதிலான ஓர் எரிபொருளாக பயன்படுத்துக்கின்றனர்.
ஆதலால் முந்திரிக்கொட்டை உடைப்பவர்களே நேரடியாக இந்த ஓட்டினை எரிபொருளாக பயன்படுத்துபவர்களுக்கு விற்பனை செய்து இலாபம் பார்க்கலாம். இல்லையேல் ஓர் முகவர் அல்லது ஏஜென்ட் ஆக இருந்து முந்திரிக்கொட்டை உடைப்பவர்களிடம் இருந்து ஓட்டினை பெற்று, தேவைப்படுவோருக்கு விற்கும் முகவர் வேலையினை கூட ஒருவர் எடுத்து செய்யலாம்.
7. மேல்தோல்
போர்மா செய்து பிரித்தெடுக்கப்படும் முந்திரிபருப்பு அல்லது முந்திரி விதையின் மேல்தோலினை இயற்கையான ஆண்டிஆக்சிடன்ட் தயாரிப்பில் ஈடுபடும் கம்பெனிகளுக்கு விற்கலாம். மேலும் லெதர் தயாரிப்பு கம்பெனிகளின் முக்கியமான மூலப்பொருள் என்பதால் அவர்களிடமும் இந்த மேல்தோலினை விற்று இலாபம் பார்க்கலாம்.
8. தூசி
முந்திரிபயிரின் மேல்தோலினை நீக்கும் போது உதிரும் அல்லது உடையும் முந்திரிபருப்பின் தூசியையும் கூட காசாக மாற்ற முடியும். இந்த முந்திரிபருப்பின் தூசியினை பேக்கரி போன்ற உணவு தயாரிப்பு துறையில் எடைக்கு வாங்கி கொள்வர்.
9. முந்திரி பழம்
ஆங்கிலத்தில் முந்திரி ஆப்பிள் என்று அழைக்கப்படும் இந்த முந்திரி பழமானது நன்கு சதைபற்று கொண்டது. மருத்துவத்துறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வயிற்றுப்போக்கு, ஸ்கர்வி போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகள் தயாரிப்பில் முந்திரி பழம் ஆனது பயன்படுகிறது.
உணவுத்துறையில் ஜூஸ், ஜாம், பிற பானங்கள் தயாரிப்பு, சட்னி, சிரப் போன்றவை முந்திரி பழத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. கோவா போன்ற இடங்களில் முந்திரி பழத்தில் இருந்து தயார் செய்யப்படும் பெனி(Feni) எனப்படும் இனிப்பு பானம் மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. இதில் பல ஊட்டச்சத்துகள் இருப்பதோடு மிகவும் ருசியானதும் கூட.
அதோடு மட்டுமில்லாமல், புட்டிங் (Pudding), வைன் (Wine), ஊறுகாய், மற்றும் இதர மிட்டாய் தயாரிப்பு தொழில்களிலும் முந்திரி பழமானது பயன்படுத்தப்படுகிறது. முந்திரி பருப்பு மட்டுமின்றி முந்திரி பழத்திற்கான தேவையும் பல்வேறு தொழில் துறைகளில் அதிகமாக உள்ளது.
முடிவுரை
முந்திரி தொழிலானது மிகவும் செழிப்பான ஓர் தொழிலாகும். இத்தொழில் செயல்முறையில் கிடைக்கும் தூசி முதற்கொண்டு விற்பனை செய்து இலாபம் பார்க்க முடியும். முந்திரிக்கொட்டை உடைக்கும் போது கிடைக்கும் ஓட்டினை எரிபொருளாக விற்பனை செய்யலாம் அல்லது எண்ணெய் எடுக்க கொடுக்கலாம். முந்திரி பயிரின் மேல்தோலினை ஆண்டி ஆக்சிடெண்ட் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு விற்று விடலாம். முந்திரி பயிரின் தோல் உரிக்கும் போது கிடைக்கும் தூசியை கூட விற்று காசு பார்த்து விடலாம். இதை விட இலாபகரமான தொழில் வேறு என்ன இருக்க முடியும்? ஆதலால் குறைந்த முதலீட்டில் அதிக இலாபம் அதுவும் வீட்டில் இருந்தபடியேவும் செய்யக்கூடிய ஓர் தொழிலாக முந்திரி தொழில் உள்ளது. துணிந்து நீங்கள் இத்தொழிலில் ஈடுபட்டு நன்கு இலாபம் ஈட்டலாம் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை.