மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் (EV Charging Stations)


பொருளடக்கம்

  • அறிமுகம்
  • மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் (EV Charging Stations)
  • சார்ஜிங் நிலையங்களுக்கான தேவை அதிகரிப்பு
  • சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கான இலகுவான சூழல்
  • எவ்வித உரிமமும் பெற தேவையில்லை!
  • சார்ஜிங் அமைப்புகளில் உள்ள வகைகள்
  • பொது சார்ஜிங் நிலையத்திற்கு தேவையானவைகள்
  • தமிழ்நாட்டின் மின்சார வாகனங்களுக்கான பாலிசி 2023
  • சார்ஜிங் நிலையங்கள் மீதான ஈர்ப்பு
  • வேலையாட்களே தேவையில்லை! டிஜிட்டல் வசதி
  • முடிவுரை

அறிமுகம்

மின்சார வாகனங்கள் பயன்பாடு பெருமளவில் அதிகரித்து வரும் இக்காலக்கட்டத்தில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் அமைக்கும் தொழில் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டும் தொழிலாக உருவெடுத்து வருகிறது. 

இருசக்கர, மூன்று சக்கர (ஆட்டோக்கள், ரிக்ஷாக்கள்), நான்கு சக்கர வாகனங்கள் (கார், பஸ்) ஆகியன மின்சார வாகனங்களாக உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வந்த வண்ணம் உள்ளன. இந்தியாவில் கடந்த நிதியாண்டில் 2022-2023 விற்பனை செய்யப்பட்ட மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 12,43,258 ஆக உள்ளது. 

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாறி வருகின்றன. டீசல் வாகனத்திற்கு ஆகும் பயன்பாட்டு செலவில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான செலவு தான் மின்சார வாகனங்களுக்கு ஏற்படுவதால் மக்கள் கவனம் மின்சார வாகனங்களின் மீது திரும்பியுள்ளது. 

உலக அளவில் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி போன்றவற்றால் இயங்கும் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாடு உள்ளிட்ட சுற்றுசூழல் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு உலக நாடுகள் அனைத்தும் மின்சார வாகனங்களுக்கு மாற தேவையான அனைத்து முன்னெடுப்புகளையும் திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றன. 

மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் (Electric Vehicle Charging Stations)

டூவீலர் முதல் கார் உள்ளிட்ட மின்சார வாகனங்களை வாங்கும் போது தரப்பட்ட சார்ஜர் கொண்டு அவரவர் இல்லங்களிலே, சார்ஜ் செய்துகொள்ள முடியும் என்றாலும், பயணத்தின் போதும், பயணிக்கும் தூரம், பயண நேர அளவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு செல்லும் வழிகளில் வாகனங்களை சார்ஜ் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. 

அத்தகைய சார்ஜிங் உள்கட்டமைப்புகளை உறுதி செய்யும் போது தான் மின்சார வாகனங்களை மக்கள் விரும்பி பயன்படுத்த அதிகம் முன்வருவர். பெட்ரோல் பம்ப் போன்று நெடுஞ்சாலைகள், நகரங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள்,  அதிகரித்து வரும் மின்சார வாகன பயன்பாட்டிற்கு ஏற்ப அதிகஅளவில்  தேவைப்படுகின்றன. ஆதலால் இக்காலக்கட்டத்தில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கான தொழில் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. 

சார்ஜிங் நிலையங்களுக்கான தேவை அதிகரிப்பு

இந்திய தொழில் கூட்டமைப்பான (CII), மின்சார வாகனங்களுக்கான தேவையும், உற்பத்தி மையங்களும் 2030 ஆம் ஆண்டு அதிவேகமாக வளர்ந்து இருக்கும் என அறிவித்து உள்ளது.  ஆதலால் இந்தியாவில் 1.32 மில்லியன் சார்ஜிங் நிலையங்கள் 2030 ஆம் ஆண்டுக்குள் தேவைப்படும் என்றும், இந்த இலக்கினை அடைய வருடத்திற்கு 4 இலட்சம் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. 

சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கான இலகுவான சூழல்

அரசாங்கமும் அதிகரித்து வரும் மின்சார வாகனங்களுக்கான தேவை மற்றும் பசுமை சுற்றுச்சூழல் இலக்கின் ஒரு பகுதியாகவும் மின்சார வாகனங்கள் உள்ளதால், இத்தொழிலினை ஊக்குவிக்கும் வகையில் இத்தொழில் தொடங்குவதற்கான விதிமுறைகளை எளிமைப்படுத்தி இருப்பதோடு மட்டுமில்லாமல், மானியங்கள், மின்சார கட்டண குறைப்பு உள்ளிட்டவற்றை அறிவித்து உள்ளன. இச்சூழலில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் தொழிலில் ஈடுபடுவது மிகவும் எளிதானதாகவும், செலவு குறைந்ததாகவும், எளிதில் இலாபம் ஈட்டும் வகையில் இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை. 

எவ்வித உரிமமும் பெற தேவையில்லை!

சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கு எந்தவித உரிமமும் பெற தேவையில்லை. மேலும் பெட்ரோல் பங்க் போன்று எந்தவொரு பெரிய நிறுவனங்களுடனும் இணைந்து செயலாற்ற தேவையில்லை. உங்கள் வீட்டிற்கு நீங்கள் ஒரு டீவி வாங்குவது போல், சார்ஜரை வாங்கி சார்ஜிங் மையத்தினை உங்கள் இல்லங்களிலே தனியாக அமைத்து கொள்ள முடியும். வீட்டிற்கான மின்சார இணைப்பினையே பயன்படுத்திக் கொள்ளலாம். சிறிய அளவிலான சார்ஜர் பாயின்ட்களுக்கு மூன்றாயிரம் அளவே ஆகும் பட்சத்தில், அதன் மூலம் பெறும் வருமானம் முதலீட்டை விட அதிகமாகவே இருக்கும்.

சார்ஜிங் அமைப்புகளில் உள்ள வகைகள்

சில நிறுவனங்கள் சார்ஜர்களை விற்பனை செய்கின்றன. சார்ஜர்களைப் பொருத்துதல், சேவை முதலியவற்றையும் இலவசமாக செய்து தருகின்றன. சார்ஜரை வாங்கும் செலவு, இடமும் மட்டும் தான் உங்களுக்கான செலவாக இருக்கும். வரும் வருமானத்தையும் முழுமையாக நீங்களே எடுத்து கொள்ளலாம். இல்லையேல், இடம் மட்டும் கொடுத்தால், நிறுவனங்கள் தங்களது சார்ஜரை நிறுவி கொள்வர். நிலபயன்பாட்டுக்கென ஒரு தொகை உங்களுக்கு கிடைக்கும். 

AC சார்ஜர் மற்றும் DC சார்ஜர் என இருவகையான சார்ஜர்கள் உள்ளன. DC சார்ஜர் அதிவேகமாக சார்ஜ் செய்யக்கூடியவை. இருசக்கரவாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களுக்கான சார்ஜர்கள் அதில் பயன்படும் பின்களைப் பொருத்து வித்தியாசமானவை. 

பொது சார்ஜிங் நிலையத்திற்கு தேவையானவைகள்

பொது சார்ஜிங் நிலையங்கள் அமைக்க, இரண்டு முதல் நான்கு கார்கள் நிற்க தேவையான இடவசதி, 100 சதுர அடி கொண்ட பார்கிங்கிற்கான இடம், வர்த்தக மின்சார அமைப்பினை பெறுதல் ஆகியவையே அடிப்படை தேவைகளாகும். முதலீடு என்பது இருசக்கரவாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களுக்கு 10,000 அளவிலும், கார்களுக்கு 75,000 அளவிலும், அதிவேக சார்ஜிங் வசதிக்கு 7 இலட்சம் அளவிலும் தேவைப்படும்.  ஐந்து வருடங்களிலே முதலீட்டின் மீதான வருமானத்தை பெற முடியும்.  

தமிழ்நாட்டின் மின்சார வாகனங்களுக்கான பாலிசி 2023

தமிழ்நாட்டின் மின்சார வாகனங்களுக்கான பாலிசி 2023ல், மின்சார வாகன உற்பத்தியாளர்கள், பயன்பாட்டாளர்கள், சார்ஜிங் நிலையங்கள் அமைப்போர்களுக்கென பல சலுகைகளை அறிவிக்கப்பட்டு உள்ளன. 

தமிழ்நாடு புதிய மின்சார வாகனம் (EV) கொள்கை 2023 / Tamilnadu New Electric Vehicle (EV) Policy 2023 –யின் படி, இக்கொள்கை காலத்தில், சார்ஜிங் நிலையங்கள் நிறுவ ஆகும் இயந்திர செலவுகளில் 25 சதவிகிதம் மானியமாக வழங்க அரசாங்கம் முன்வந்து உள்ளது. 

மேலும் பொது சார்ஜிங் நிலையங்களுக்கான மின்சார கட்டணங்களும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. 51–112 kW இணைப்புகளுக்கான மாத கட்டணம் ஒரு kWh-க்கு முந்நூறு ரூபாயிலிருந்து 75 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 112 kW-க்கு மேற்பட்ட இணைப்புகளுக்கு மாத கட்டணம் 138 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 0-50 kW வரையிலான இணைப்புகளுக்கு மாத கட்டணம் ஒரு kWh-க்கு நூறு ரூபாயிலிருந்து 25 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 

சார்ஜிங் நிலையங்கள் மீதான ஈர்ப்பு

மின்சார வாகன பயன்பாட்டாளர்கள் தங்கள் இல்லங்களில் சார்ஜ் செய்யும் போது 6 மணி நேரம் எடுக்கும் பட்சத்தில், சார்ஜிங் நிலையங்களில் உள்ள அதிவேக DC சார்ஜர் மற்றும் வர்த்தக சார்ஜர்களின் மூலம் ஒரு மணி நேரத்தில் சார்ஜ் செய்து கொள்ள முடியும். ஆதலால் மின்சார வாகன பயன்பாட்டாளர்கள் சார்ஜிங் நிலையங்களில் சார்ஜ் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

வேலையாட்களே தேவையில்லை! டிஜிட்டல் வசதி

வேலையாட்கள் தேவையில்லை. சார்ஜிங் மையங்களில் மொபைல் ஆப் மூலம் ஆன்லைன் பேமன்ட் செய்தவாறு வாடிக்கையாளர்களே சார்ஜ் செய்து கொள்ள முடியும். 

எளிதாக ஆன்லைன் கட்டணம், மொபைல் ஆப் மூலம் வாடிக்கையாளர்களை அணுகும் அதே நேரத்தில் தொலைதொடர்பு வாடிக்கையாளர் சேவையினையும் வழங்கும் போது சிறப்பான தொழில் முன்னேற்றத்தினைக் காணலாம். 

முடிவுரை

மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களுக்கான தேவை அதிகமாகவும், இத்தொழில் தொடங்குவதற்கான அனைத்து விதமான சலுகைகள், உதவிகளையும் அரசாங்கம் வழங்கி வரும் இக்காலக்கட்டத்தில் நீங்கள் தொழில் முனைவராக விரும்பினால் அல்லது புதியதொரு தொழிலில் முதலீடு செய்ய விரும்பினால், சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் தொழில் எளிதானதாகவும், இலாப ஈட்டக்கூடியதாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. தற்போது இத்தொழில் தொடங்குவதற்கான சூழல் இலகுவானதாகவும், ஊக்கமளிக்கும் விதமாகவும் இருப்பதனால் தான்,  இன்றைய நாளில் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கான தொழில்துறை சார்ந்த வல்லுநர்களின் ஆலோசனைகளில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் தொழில் ஆனது பிரதானமான ஒன்றாக உள்ளது. மேலும் குறைந்த முதலீட்டில் அதிக இலாபம் ஈட்டி தரும் ஓர் தொழிலாகவும் இத்தொழில் இருப்பது தனிச்சிறப்பு ஆகும். 

Recent Posts