என்றுமே பிரபலமான ஃபேன்ஸி கடை வைங்க


பொருளடக்கம்

  • எல்லா காலங்களிலும் நிலைத்து இருக்கும் ஃபேன்ஸி கடை தொழில்
  • ஃபேன்ஸி கடை வைக்க முதலில் என்ன பண்ணனும்?
  • எவ்வளவு முதலீடு வேணும்?
  • கடையை எந்த மாதிரியான இடத்தில் வைக்கணும்?
  • ஃபேன்ஸி கடை வைக்க தேவையான உரிமங்கள், செய்ய வேண்டிய பதிவுகள்
    • தொழிலை பதிவு செய்தல்
    • MSME – யின் கீழ் பதிவு செய்தல்
    • SSI பதிவு செய்தல்
    • ஜிஎஸ்டி (GST) எண்
    • கடை உரிமம் (Shop License)
    • வர்த்தக உரிமம் (Trade License)
    • டிரேட் மார்க் (Trade Mark)
    • மாசு கட்டுப்பாடு சான்று
  • ஃபேன்ஸி கடைக்கான பொருட்கள் என்ன?
  • ஃபேன்ஸி கடைக்கான பொருட்களை எங்கு எப்படி வாங்கணும்?
  • ஃபேன்ஸி கடையின் அமைப்பு
  • உங்கள் கடையினை விளம்பரப்படுத்துங்கள்
  • கடையில் விற்பனையாளரை பணிக்கு வைத்தல்
  • ஃபேன்ஸி கடையில் வரும் இலாபம்

எல்லா காலங்களிலும் நிலைத்து இருக்கும் ஃபேன்ஸி கடை தொழில்

          காலப்போக்கில் காணாமல் போன தொழில்கள் பல. உதாரணத்திற்கு சொல்லணும்னா, STD பூத்கள், பாட்டு Cassette விற்பனை, ரேடியோ பெட்டி, லேண்ட்லைன் ஃபோன்கள் என கூறி கொண்டே போகலாம். ஆனால் நம் சிறு பருவத்தில் இருந்து சந்தையில், வணிக பகுதிகளில் காணப்படும் பலதரப்பட்ட கடைகளில், இன்றைய தேதியளவிலும் எந்தவொரு ஏற்ற தாழ்வுகளும் இல்லாமல் நல்ல வரவேற்பும், பிரபலமாகவும் இருந்து வரும் ஒரு கடைன்னு சொன்னா, அது வேற எதுவும் இல்லை, பெண்கள் விரும்பி செல்லும் ஃபேன்ஸி கடை தான். 

பெரிய அளவிலும் சிறிய அளவிலும் செய்யப்படுகிற எந்தவிதமான அழகு சார்ந்த தொழில்களுக்கு சந்தை வாய்ப்பு இன்றளவும் வருங்காலங்களிலும் பிரகாசமாகவே உள்ளது. அந்த வகையில் குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய ஃபேன்ஸி கடை நல்ல ஒரு இலாபம் கொடுக்கும் தொழிலாக இன்றளவும் உள்ளது. 

ஃபேன்ஸி கடை வைக்க முதலில் என்ன பண்ணனும்?

எந்தவொரு தொழில் ஆரம்பிக்கிறது முன்னாடியும், அந்த தொழிலை பத்தி நிறைய தெரிஞ்சுக்கிறது தான் முதல் படி. எவ்வளவு முதலீடு தேவைப்படும்? எங்க கடை வைக்கணும்? என்னென்ன பொருள்கள் வாங்கணும்? எவ்வளவு வாங்கணும்? எங்கிருந்து வாங்கணும்? மக்களைக் கடைக்கு வர வைக்கிறது எப்படி? கடைக்கு வந்தவங்களை எப்படி நடத்தணும்? மார்கெட்டிங் பண்றது எப்படி?. இப்படி எல்லா கேள்விகளுக்கும் விடை தெரிஞ்ச அப்புறம் கவனமா உங்க முதலீடு எவ்வளவு அப்படிங்கறது பொருத்து, உங்களுக்கான ஒரு பிளான் ரெடி பண்ணுங்க. இப்படி தொழில் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, நீங்க பண்ற இந்த மார்கெட் பத்தின ஆராய்ச்சி, அதுக்கேத்த மாதிரியான உங்க பிளான். இந்த இரண்டும் தான் நீங்க ஃபேன்ஸி கடை வைக்கிறதுக்கு முன்னாடியும் பண்ண வேண்டிய முதல் வேலை. 

எவ்வளவு முதலீடு வேணும்?

ஃபேன்ஸி கடை வைக்க நீங்க பார்க்கக்கூடிய இடம் சொந்த இடமா, வாடகை கடையா என்பதை பொருத்து தான் முதலீட்டில் வேறுபாடு இருக்கும். கடை இருக்கும் இடத்தை பொருத்தும், வாடகை மற்றும் அட்வான்ஸ் தொகையில் மாற்றம் இருக்கும். கடைக்குள் பொருட்களை வைக்க தேவையான அலமாரிகள், எங்கிருந்து எவ்வாறு இந்த பொருட்கள் அனைத்தும் வாங்க போகிறோம் என்பதை எல்லாம் பொருத்தது தான் ஃபேன்ஸி கடை வைக்க தேவையான முதலீடு என்பது. நகர்புற பகுதியில் ஒரு சிறிய அளவிலான ஃபேன்ஸி கடை வைக்க ஒரு சில இலட்சங்கள் தேவைப்படும். உதாரணமாக குறைந்தபட்சம் 2 இலட்சம் முதல் நீங்கள் உங்களது பிளானில் கொண்டு வரும் மேலே சொன்ன அனைத்து விதமான செலவுகளை பொருத்து பல இலட்சங்கள் வரை ஃபேன்ஸி கடை வைப்பதற்கான  முதலீடு இருக்கும். நீங்கள் பெரிய நகரங்களில் சூப்பர் மார்க்கெட் தரத்தில் பெரிய அளவிலான ஃபேன்ஸி கடை அமைக்க நினைத்தால் கோடிகளில் முதலீடு தேவைப்படும். 

கடையை எந்த மாதிரியான இடத்தில் வைக்கணும்?

மக்கள் அதிகமாக வர்ற சந்தை பகுதியாக இருக்கணும். குறிப்பாக பெண்கள் அதிகம் வரக்கூடிய பகுதியாக இருக்கணும். மளிகை கடைகள், காய்கறி கடைகள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள், ஜவுளி கடைகள், கோவில்கள் போன்ற வழிபாட்டு தலங்கள், குடியிருப்பு பகுதிகள் அதிகம் உள்ள இடங்கள், பெண்கள் படிக்கும் பள்ளி கல்லூரிகள் என பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் ஃபேன்ஸி கடை அமையுங்கள். 

ஏற்கனவே ஃபேன்ஸி கடைகள் இருக்கும் பகுதியிலும் கடை வைக்கிறது என்பது இலாபம் தராது. போட்டி அதிகமாக இருக்கும். அதனால் ஃபேன்ஸி கடைகள் அதிகம் இல்லாத மக்கள் குறிப்பாக பெண்கள் அதிகம் நடமாடக்கூடிய இடத்தில் ஃபேன்ஸி கடைகள் வையுங்கள். 

சொந்த இடமாக இருந்தால் கவலையில்லை. வாடகைக்கு அல்லது குத்தகைக்கு கடை எடுக்குறீங்க அப்படின்னா, உங்க முதலீடு எவ்வளவு அப்படிங்கறதையும் பொருத்து தான், ஃபேன்ஸி கடை வைக்கும் இடத்தையும் தேர்வு செய்யணும். உதாரணமாக உங்க முதலீடு கம்மியாக இருக்கும் பட்சத்தில், நகரத்தின் முக்கிய சந்தை பகுதியில், நல்ல வியாபாரமாகும் இடமாக இருந்தாலும் அந்த பகுதியில் வாடகைக்கு கடை எடுப்பது செலவு அதிகம் பிடிக்கக்கூடிய, உங்க முதலீடு தொகைக்கு ஒத்து வராத ஒன்றாக இருக்கும். இந்த மாதிரி சூழ்நிலை இருக்கிறவங்க, அப்பேர்ப்பட்ட வணிக பகுதியின் வெளிப்பகுதியில், குடியிருப்பு பகுதிகள் அதிகம் உள்ள பகுதியில், பெண்கள் படிக்கும் பள்ளி கல்லூரிகள் அருகில் கடை பார்க்கலாம். 

ஃபேன்ஸி கடை வைக்க தேவையான உரிமங்கள், செய்ய வேண்டிய பதிவுகள்

தொழில் செய்ய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள ஒழுங்குமுறைகளைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். 

தொழிலை பதிவு செய்தல்: தனிநபர் நிறுவனமாகவோ அல்லது கூட்டுறவு நிறுவனமாகவோ உங்களது ஃபேன்ஸி கடையினை பதிவு செய்து கொள்ளலாம்.

MSME – யின் கீழ் பதிவு செய்தல்: ஃபேன்ஸி கடை தொழிலும் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கீழ் வருகிறது. அதனால் MSME ஆக MSME அமைச்சகத்தினால் வழங்கப்பட்டு இருக்கிற இணையதளத்தில் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளுங்கள். இதனால் MSME அமைச்சகத்தினால் வழங்கப்பட்டு வரும் பல திட்டங்களின் கீழ் நிதி உதவி உள்ளிட்ட பல பயன்களைப் பெற முடியும்.

SSI பதிவு செய்தல்: MSME போன்று SSI  (Small Scale Industries) கீழ் பதிவு செய்து கொண்டால், அரசின் பல திட்டங்களின் மூலம் பயன் பெறலாம். 

ஜிஎஸ்டி (GST) எண்: ஜிஎஸ்டி-க்கான பதிவினை செய்து, ஜிஎஸ்டி எண்ணினையும் பெற்று கொள்ளுங்கள்.

கடை உரிமம் (Shop License): வணிக பயன்பாட்டுக்காக கடை அமைக்கும் போது கடை உரிமம் விண்ணப்பித்து வாங்க வேண்டும். 

வர்த்தக உரிமம் (Trade License): எந்தவொரு வர்த்தகத்தில் ஈடுபடும் போதும், அதற்கென வர்த்தக உரிமத்தினை, நீங்கள் கடை வைக்கும் பகுதிக்குட்பட்ட நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்து வாங்கி கொள்ளுங்கள். 

டிரேட் மார்க் (Trade Mark): உங்கள் கடையின் பெயர், தனித்தன்மையை பாதுகாத்து கொள்ள டிரேட் மார்க் பதிவு செய்து கொள்ளுவது நல்லது.

மாசு கட்டுப்பாடு சான்று: மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் இருந்து ஃபேன்ஸி கடை அமைக்கவும் சான்றிதழ் வாங்க வேண்டும். ஏனென்றால் ஃபேன்ஸி கடைகளில் பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் மாசு கட்டுப்பாடு சான்றிதழும் வாங்க வேண்டும். 

ஃபேன்ஸி கடைக்கான பொருட்கள் என்ன? 

பெண்களுக்கான அலங்கார பொருட்கள் அனைத்தும் தான் ஃபேன்ஸி கடைகளில் விற்க வேண்டிய முதன்மையான பொருட்கள். கவரிங் நகைகள், பாசிகள் மற்றும் விலை குறைந்த கிரிஸ்டல் நகைகள், பிளாஸ்டிக்கினாலான வளையல்கள், பாசிகள், தோடுகள், ஆண்டிக் (Antique) நகைகள், சிகை அலங்காரம் பொருட்களான ரப்பர் பேண்ட்டுகள், சவுரி, கிளிப்புகள் உள்ளிட்டவைகளை வாங்கி விற்பனைக்கு வைக்க வேண்டும். 

மேலும் ஒப்பனை (Make-up) செய்ய தேவையான பொருட்களான கண் மை, மஸ்காரா, ஐ லைனர் (Eye Liner), லிப்ஸ்டிக், ரோஸ் பவுடர், பவுண்டேஷன், சீரம்கள் (Serum) உள்ளிட்டவைகள் அனைத்தும் விற்பனைக்கு ஃபேன்ஸி கடைகளில் வையுங்கள்.  

அதோடு பெண்களுக்கான ஹேண்ட் பேக்குகள், சானிட்டரி நாப்கின்கள், ஷாம்பூக்கள், கண்டிஷனர்கள், சோப்புகள், சன் ஸ்க்ரீன், காலணிகள் (Chappals & Shoes), கைக்குட்டைகள் (Kerchief), ஸ்டேஷனரி பொருட்கள், கிஃப்ட்கள், பாத்ரூம் மக் (Mug), டப் (Tub) போன்ற வீட்டுஉபயோக பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள் போன்றவற்றையும் விற்பனைக்கு ஃபேன்ஸி கடைகளில் வாங்கி வைத்தால் நன்றாக விற்பனை ஆகும். 

ஃபேன்ஸி கடைக்கான பொருட்களை எங்கு எப்படி வாங்கணும்?

ஃபேன்ஸி கடைக்கான பொருட்கள் அனைத்தையும் மொத்த விற்பனை செய்பவர்களிடம் இருந்து வாங்கினால் தான் குறைந்த விலைக்கு கணிசமான இலாபம் வைத்து உங்களால் மறுவிற்பனை செய்ய முடியும். அதனால் உங்கள் பகுதியில் அல்லது உங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள மொத்த விற்பனை செய்பவர்களிடம் இருந்து உங்கள் ஃபேன்ஸி கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ளுங்கள். நீண்ட தொலைவில் உள்ள மொத்த விற்பனையாளரிடம் இருந்து பொருட்களை வாங்குகிறீர்கள் என்றால் போக்குவரத்து மற்றும் வாங்கிய பொருட்களை எப்படி கொண்டு வர போகிறீர்கள் போன்றவற்றையும் கவனத்தில் வையுங்கள். இந்த மாதிரி தொலைவில் உள்ள மொத்த விற்பனையாளரிடம் இருந்து பொருள் வாங்கும் போது வாங்கும் விலையில் இருந்து போக்குவரத்து செலவுகள் உள்ளிட்டவைகளை கழித்த பின், அருகில் உள்ள மொத்த விற்பனையாளரிடம் இருந்து வாங்கும் விலையோடு ஒப்பிட்டு, குறைவாக இருந்தால் மட்டும் பயணம் செய்து வாங்குங்கள். 

உங்கள் அருகாமையில் அல்லது உங்கள் ஊருக்கு அருகிலேயே உற்பத்தியாளர்கள் இருந்தால், அவர்களிடம் இருந்து நேரடியாக வாங்குனீர்கள் என்றால், வாங்கும் விலை இன்னும் குறைவாக இருக்கும். அதனால் நீங்கள் அதிக இலாபம் பார்க்க முடியும். 

உதாரணமாக நமது இந்தியாவில் டெல்லியில் உள்ள சதர் பஜார் ஆசியாவிலேயே ஒரு மிகப்பெரிய மொத்த விற்பனை சந்தையாக இருக்கிறது. இங்கு அழகுசாதன பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், கிஃப்ட்கள், வாசனை திரவியங்கள் (Perfumes), கவரிங் நகைகள் என ஒரு ஃபேன்ஸி கடைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் மிக மலிவான விலைக்கு வாங்கி வரலாம். இந்த மொத்த சந்தையில் பொருட்கள் 2 ரூபாயில் இருந்து கிடைக்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள். நீங்கள் இந்த டெல்லி சதர் பஜாரில் 2 ரூபாய்க்கு வாங்கும் ஐ ப்ரோ (Eye Brow) பென்சிலை 10 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். ஃபேஷியல் ப்ளீச் பொருளை இங்கே 25 ரூபாய்க்கு வாங்கி நீங்கள் 60 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்ய முடியும். 

ஃபேன்ஸி கடையின் அமைப்பு

ஃபேன்ஸி கடை அமைக்கும் போது விற்பனைக்காக வைத்திருக்கும் பொருட்கள் அனைத்தையும் கடைக்கு வரும் மக்கள் பார்க்க ஏதுவாக அலமாரிகளில் அடுக்கி கண்ணாடி கதவுகள் கொண்டு மூடி வையுங்கள். கண்ணாடியால் சூழப்பட்ட பெட்டிகளில் பொருட்களை பார்வைக்கு வையுங்கள். இந்த உள்கட்டமைப்பு வசதிகளுக்கு நீங்கள் செலவு செய்ய வேண்டி இருக்கும். உங்கள் முதலீடு தொகையை கணிக்கும் போது நீங்கள் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டிய முக்கியமான மேலும் ஃபேன்ஸி கடை வைக்க தேவையான அடிப்படையான ஒரு செலவு அல்லது சொத்துகள் என இவற்றை கூறலாம். 

உங்கள் கடையினை விளம்பரப்படுத்துங்கள்

அதிகம் மக்கள் கூடும் பகுதியில் கடை வைத்தல், குறைந்த விலையில் விற்பனை செய்ய தேவையான பொருட்களை வாங்குதல் போன்றவற்றால் மட்டும் உங்களால் பொருட்களை விற்று இலாபம் பார்க்க முடியாது. 

திறப்பு விழா ஆஃபர்களை அறிவியுங்கள். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வாங்கினால், பரிசு பொருட்கள் அல்லது தள்ளுபடிகள் என அறிவியுங்கள். இந்த அறிவிப்புகள் மக்களை சென்று சேரும்படி, தினசரி பத்திரிக்கைகளில் துண்டு பிரசுரங்கள் அனுப்புங்கள். நீங்கள் கடை வைக்க போகும் பகுதி, குடியிருப்பு பகுதிகள், சந்தை பகுதிகள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உங்களது முதலீடுக்கு ஏற்றாற்போல் சிறிய அல்லது பெரிய அளவிலான மக்கள் கண்களில் படும் வகையில் பேனர்கள், சுவரொட்டிகள் வையுங்கள். உள்ளூர் டிவி சேனல்கள், ரேடியோக்களில் விளம்பரம் செய்யுங்கள். 

கடையின் பெயர் பலகையினை நன்றாக அனைவரது கண்களிலும் படுமாறு பெரிதாகவும், LED லைட்டுகள் கொண்டும் அலங்கரித்து மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைத்திடுங்கள்.

இன்றைய டிஜிட்டல் உலகில், இணைய வழி மார்கெட்டிங் செய்வது மிகவும் எளிதான ஒன்று. நீங்களே சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றில்  உங்களது ஃபேன்ஸி கடையின் பேரில் கணக்குகள் தொடங்கி, உங்கள் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் படங்கள், விபரங்கள் போன்றவற்றை கண்ணை கவரும் வகையில் புகைப்படங்கள், எடிட் செய்யப்பட்ட படங்கள், வீடியோக்களாக பதிவிடலாம். 

உங்கள் ஃபேன்ஸி கடைக்கென தனி வெப்சைட், மொபைல் ஆப் போன்றவற்றை அமைத்து ஆன்லைன் வணிகமும் செய்யலாம். ஏனென்றால் இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய தான் அதிகம் விரும்புகிறார்கள். இவ்வாறு உங்கள் கடைக்கான வெப்சைட், மொபைல் ஆப் மட்டுமின்றி ஆன்லைனில் Google ads, SEO, FB Ads போன்ற விளம்பரங்களும் செய்ய ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்பவரை வேலைக்கு மாத சம்பளத்தில் பணிக்கு வைத்து கொள்ளலாம். 

கடையில் விற்பனையாளரை பணிக்கு வைத்தல்

இந்த விளம்பரங்கள் அனைத்தும் உங்கள் கடையை நோக்கி மக்களை வரவழைக்கும். ஆனால் வந்தவர்கள் பொருளை வாங்கி செல்லுவதில் தான் நீங்கள் பணியமர்த்தும் விற்பனையாளர்களின் பங்கு உள்ளது. விற்பனை பிரிவில் முன் அனுபவம் உள்ளவர்களை பணிக்கு வையுங்கள். புதியவர்களை பணிக்கு வைக்கும் போது, அவர்களுக்கு பொருள் வாங்க வருபவர்களிடம் எப்படி பேச வேண்டும் உள்ளிட்ட பயிற்சிகளை வழங்குங்கள். 

விற்பனையாளர்களின் அணுகுமுறை பொருள் வாங்க வருபவர்களின் நம்பிக்கை மற்றும் நட்பினை பெறும் வகையில் இருக்க வேண்டும். பொருள் வாங்க வருபவர்களை விற்பனையாளர்கள் இன்முகத்தோடும், பொறுமையாகவும் மரியாதையாகவும் நடத்த வேண்டும். அப்பொழுது தான் மக்கள் மீண்டும் மீண்டும் உங்கள் கடைக்கே பொருள் வாங்க வருவார்கள். 

ஃபேன்ஸி கடையில் வரும் இலாபம்

ஃபேன்ஸி கடை வைப்பதன் மூலம் நல்ல கணிசமான இலாபம் பார்க்கலாம். ஃபேன்ஸி கடையில் நீங்கள் விற்பனை செய்யும் பொருட்களை டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூர் போன்ற பெரிய நகரங்களில் உள்ள மொத்த விற்பனை செய்யும் இடங்களில் இருந்து மிக குறைந்த விலைக்கு வாங்கி வந்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல  இலாபம் பார்க்கலாம். முந்தைய பகுதியில் சொன்னது போல, இது போன்ற பெரு நகரங்களில் உள்ள மொத்த விற்பனை சந்தையில், 2 முதல் 6 ரூபாய்க்கு ஒரு பொருளை வாங்கி, அதற்கு 10 முதல் 18 ரூபாய் வரை விலை வைத்து நீங்கள் விற்பனை செய்ய முடியும். ஒரு பொருளுக்கு மட்டுமே 100-400% இலாபம் வருகிறது. உங்களது கடையினை நடத்த ஆகும் பிற செலவுகள் எல்லாம் போக நல்ல கணிசமான இலாபத்தினை ஃபேன்ஸி கடை நடத்துவதன் மூலம் நீங்கள் அடைய முடியும்.

Recent Posts