கிஃப்ட் கடை


பொருளடக்கம்

  • கிஃப்ட் கடை வைக்கலாமா?
  • கிஃப்ட் கடை வைக்க தேவையான உரிமங்கள் மற்றும் ஆவணங்கள்
  • கிஃப்ட் கடையில் என்னென்ன பொருள்கள் விற்பனைக்கு இருக்க வேண்டும்?
  • எங்கு கடை அமைப்பது?
  • எப்படி மார்கெட்டிங் செய்வது?
  • மக்கள் வரவை அதிகரிக்கும் வழிகள்
  • பார்ட்டிகள், விழாக்களில் அலங்காரம், திட்டமிடல் செய்து கொடுத்தல்
  • இலாபம் எவ்வளவு கிடைக்கும்?

கிஃப்ட் கடை வைக்கலாமா?

சுபநிகழ்வுகள், வெற்றி தருணங்கள், தனிப்பட்ட முறையில் முக்கியமான நாட்கள் மற்றும் விழா காலங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, வாழ்த்து தெரிவிக்க, நன்றியை வெளிப்படுத்த என நம் வாழ்வின் பல தருணங்களில் பரிசுகளை கொடுக்கவும் பெறவும் செய்கிறோம். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கொடுக்கப்பட்ட பரிசுகள் என்னவென்று பார்த்தால், காலத்திற்கு தகுந்தாற்போல் வித்தியாசம் கொண்டு இருக்கின்றன. ஆனால் பரிசுகள் பரிமாறி கொள்ளும் மற்றும் கொடுக்கும் வழக்கம் உலகம் முழுவதும் நிலைத்து நிற்கிறது. 

அந்த வகையில் பரிசு பொருட்களை விற்பனை செய்யும் கிஃப்ட் கடை வைக்கும் தொழிலுக்கு நல்ல வரவேற்பும், இலாபம் ஈட்டும் தன்மையும் உண்டு. அனைத்து தரப்பு மக்களும் வாங்கும் வகையில் குறைந்த விலையில் இருந்து அதிக விலை வரை உள்ள பரிசு பொருட்கள் ஏராளமாக உள்ளன. ஆதலால் நீங்கள் கடை அமைக்க விரும்பும் பகுதியில் உள்ள மக்களுக்கு ஏற்றவாறு உங்கள் கடைக்கான பரிசு பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்குங்கள். அந்த வகையில் கிஃப்ட் கடையில் விற்பனைக்கு வைக்க வேண்டிய பொருட்கள் எல்லாம் என்ன? உங்கள் கிஃப்ட் கடையின் வியாபாரத்தில் நல்ல இலாபம் ஈட்டுவது எப்படி? மார்கெட்டிங் செய்வது எப்படி? என அனைத்தையும் இந்த பதிவில் பார்த்து விடலாம் வாங்க. 

கிஃப்ட் கடை வைக்க தேவையான உரிமங்கள் மற்றும் ஆவணங்கள்

ஒரு சிஏ (சார்ட்டட் அக்கவுன்டன்ட்) இடம் சென்று ஆலோசனை பெறுங்கள். அவர் உங்களது முதலீடு, தேவைகள் போன்றவற்றை பொருத்து கிஃப்ட் கடை அமைக்க சட்ட ரீதியாக செய்ய வேண்டிய பதிவுகள் உள்ளிட்ட ஒழுங்குமுறைகள் ஆகியவற்றை விளக்கி கூறி தேவையான ஆலோசனைகள் வழங்குவார். அதன்படி தேவையானவற்றை செய்து கொள்ளுங்கள். 

உங்களது தொழிலை தனிநபர் நிறுவனமாகவோ கூட்டுறவு நிறுவனமாகவோ சிஏ போன்றோரிடம் பெற்ற ஆலோசனையின் படி பதிவு செய்ய வேண்டும். 

விற்பனை மற்றும் சேவை வரிக்கு GST இணையதளத்திலே ஆன்லைனில் பதிவு செய்து GST எண்ணினை பெற்று கொள்ள வேண்டும். 

கடையை வாடகைக்கு அல்லது ஒத்திக்கு எடுக்குகிறீர்கள் என்றால் அதற்கான ஒப்பந்தங்களை எழுதி வாங்கி கொள்ளுங்கள். 

உங்கள் கடையின் பெயரில் இன்சூரன்ஸ் எடுத்தல் போன்றவற்றையும் நீங்கள் கருத்தில் கொள்ளலாம். 

கிஃப்ட் கடையில் என்னென்ன பொருள்கள் விற்பனைக்கு இருக்க வேண்டும்?

மக்கள் என்ன பொருட்கள் எல்லாம் பரிசாக வழங்க நினைக்கிறார்கள் என்பதை யூகித்து அதற்கேற்றார் போல் பரிசு பொருட்களை வாங்கி வையுங்கள். நீங்கள் கடை வைக்கும் பகுதியில் உள்ள மக்கள் விரும்பும் பொருள்கள் என்னவென்று முதலில் ஆராயுங்கள். அதன்படி உங்கள் கடைக்கு தேவையான பொருட்களை தேர்வு செய்யுங்கள். 

பொதுவாக இன்றளவும் டைம் பீஸ் என்றழைக்கப்படும் விதவிதமான டிசைன்கள் கொண்ட சுவரில் மாற்றக்கூடிய கடிகாரங்கள், கைக்கடிகாரங்கள், கிருஷ்ணர் உள்ளிட்ட பல ஓவியங்கள், போட்டோ ஃபிரேம்கள் போன்றவை தொடர்ந்து மக்கள் தேர்ந்தெடுக்கும் பரிசு பொருட்கள் ஆகும்.

பிரத்தியேகமான (Customized) பரிசு பொருட்களை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். பொதுப்படையாக இல்லாமல் தனிப்பட்ட விஷயங்களை இந்த மாதிரியான பரிசு பொருட்களில் சேர்க்க முடியும். இதன் மூலம் இந்த மாதிரியான பரிசு பொருட்களில் தனித்தன்மை கிடைக்கிறது என்பதால் மக்கள் அதிகம் கஸ்டமைஸ்டு பரிசு பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். 

இந்த கஸ்டமைஸ்டு பரிசு பொருட்கள் என்பது நீங்கள் வாங்கும் பொருட்களிலே நிலையாக வாடிக்கையாளர்கள் விரும்பும் வாசகம், பெயரினை எழுதி கொடுப்பது, வேண்டும்படி வரைந்து கொடுப்பது உள்ளிட்டவை ஆகும். 

உதாரணமாக பிரேஸ்லெட் போன்றவற்றில் பெயர் அல்லது வாசகங்களை பதிந்து தருவது ஆகும். 

அடுத்தது டீசர்ட்டில் பிரிண்ட் செய்து கொடுத்தல். ஒரே நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள், நண்பர்கள், குடும்ப உறவினர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் என ஒரு குறிப்பிட்ட குழுவினர் ஏதேனும் சிறப்பு நிகழ்வுகளில் அணிய, டீசர்ட்டில் வாசகங்கள், நிறுவன பெயர், குழுவின் பெயர், சில ஓவியங்கள் உள்ளிட்டவற்றை அச்சிட்டு அணிய விரும்புவர் அல்லது பரிசாக குழுவில் உள்ள அனைவருக்கும் வழங்க விரும்புவர். தனிப்பட்ட முறையில் வழங்கவும் விரும்புவர். ஆதலால் இன்றைய காலத்தில் பரவலாக இருக்கும் டீசர்ட்டில் பிரிண்ட் செய்து கொடுப்பதை உங்களது கடைகளில் செய்து கொடுங்கள். 

மண்ணாலான அழகிய பொம்மைகளை விற்பனைக்கு வையுங்கள். பீங்கான் பொருட்களும் வாங்கி வையுங்கள். காதலர்கள், தம்பதியர்கள், குடும்பங்கள், நண்பர்கள், சகோதர சகோதரிகள், காவியங்களில் வரும் கதாப்பாத்திரங்கள், தெய்வங்கள் போன்ற பலவற்றை  பிரதிபலிக்கும் பொம்மைகளை சிறியது முதல் பெரிய அளவில் வாங்கி விற்பனைக்கு வையுங்கள். 

கைவினை பொருட்கள் அதிக வரவேற்பை பெறும். மற்ற பொருட்களை காட்டிலும் கைவேலைப்பாடு கொண்ட பொருட்கள் என்றுமே கவனத்தையும் தனித்தன்மையும் தரவல்லன. 

அழகுசாதன பொருட்களையும் பரிசாக வழங்கும் வழக்கம் உள்ளது. மேலும் பல அழகுசாதன பொருட்களை ஒரு தொகுப்பாக கொண்ட பரிசு கூடைகள் மிகவும் பிரபலம். மேலும் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட ஹேண்ட் பேக்குகள், பர்சுகள், பேக்குகள் போன்றவைகளையும் விற்பனைக்கு வையுங்கள். 

தனிப்பட்ட முறையில் டிசைன் செய்த வீட்டு அலங்கார பொருட்கள் அன்பையும், தனித்தன்மையும் வழங்கக்கூடியவைகள். சுவரில், கதவுகளில், அறையின் நடுவே தொங்கவிடப்படும் பொருட்களில் தனித்தன்மை தரும் வகையில், புகைப்படங்கள், வாசகங்கள், ஓவியங்கள் புகுத்தி வழங்குதல் உள்ளிட்டவை இதில் அடங்கும். 

கிரிஸ்டல் போன்ற படிகத்தினால் ஆன பரிசு பொருட்களும் நல்ல வரவேற்பு கொண்டு உள்ளன. 

காய்ந்த மலர்களை கொண்டும் அழகான படைப்புகளை மேற்கொண்டு விற்பனை செய்கின்றனர். காய்ந்த மலர்கள் என்றுமே நிலைத்து இருக்கக்கூடியவை. கலர் கலரான இந்த காய்ந்த பூக்களை வைத்து அழகிய ஓவியங்கள், படைப்புகள் செய்து விற்பனை செய்யுங்கள். இல்லையெனில் இவ்வாறு தயாரிக்கப்பட்ட படைப்புகளை வாங்கியும் மறுவிற்பனை செய்யலாம். 

இனிப்புகளை அழகிய பெட்டிகளில் வைத்து பேக் (Pack) செய்து பரிசாக வழங்கும் வழக்கமும் உள்ளது. ஆதலால் அத்தகைய அழகிய வேலைப்பாடுகள் கொண்ட இனிப்புகள் கொண்ட பெட்டிகள் வாங்கி பரிசு பொருளாக அலங்கரித்து கொடுக்கலாம். 

விதவிதமாக வடிவமைக்கப்பட்ட, ஏதேனும் ஒரு தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்ட பல வாசகங்கள், படங்கள் கொண்ட காலண்டர்கள் அல்லது தனித்தன்மை பெறும் வண்ணம் டிசைன் செய்யப்பட்ட காலண்டர்களும் வாங்கி விற்பனைக்கு வையுங்கள். வருட தொடக்கத்தில் காலண்டர்களை பரிசு பொருட்களாக வழங்கும் வழக்கம் உள்ளது.

ஸ்டப்டு பொம்மைகளும் மிகவும் பிரபலமான பரிசு பொருட்கள் ஆகும். பஞ்சு உள்ளிட்டவைகளால் வெல்வெட் போன்ற துணிகளின் உள்ளே அடைக்கப்பட்டு தைக்கப்பட்ட விலங்குகள், சின்னங்கள், லேண்ட்மார்க் போன்ற உருவங்கள் நன்கு விற்பனை ஆகும். அனைவரும் அறிந்த டெட்டி பியர் (Teddy Bear), குழந்தைகள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் இன்றளவும் பிரபலமாகவும், அதிகம் விரும்பி வாங்கப்படும் ஓர் ஸ்டப்டு பொம்மை ஆகும். 

எங்கு கடை அமைப்பது?

மக்கள் அதிகம் கூடும் வணிக பகுதிகளில் கடை அமைத்திடுங்கள். ஏற்கனவே கிஃப்ட் கடைகள் இருக்கும் பகுதியில் கடை அமைத்தல் சரியான தேர்வாக இருக்காது. மேலும் மிகுந்த போட்டி நிறைந்ததாக இருக்கும். ஆதலால் கிஃப்ட் கடைகள் அதிகம் இல்லாத பகுதியினை தேர்வு செய்து கடை வையுங்கள்.

அனைத்து வயதினரும் பரிசு பொருட்கள் கொடுப்பதில் ஆர்வம் கொண்டு இருக்கின்றனர் எனினும், இளம் வயதினர்கள் பரிசு பொருட்களை வழங்கி மகிழ்வதில் ஆர்வம் அதிகம் கொண்டு உள்ளனர். ஆதலால் இளம் வயதினர் அதிகம் கூடுகிற பகுதிகளில் கடை வையுங்கள். 

எப்படி மார்கெட்டிங் செய்வது?

உங்களது கடையானது நன்றாக தெரியும் வண்ணம் கடையின் பெயர் பலகையினை வித்தியாசமாக, அலங்கார லைட்டுகள் கொண்டு கண்ணை கவரும் வகையில் அமைத்திடுங்கள். மக்களிடையே உங்கள் கடைக்கான அறிமுகத்தினை பெற திறப்பு விழா ஆஃபர்களை வழங்கி உங்கள் கடைக்கான விளம்பரத்தை பெறுங்கள். 

உங்கள் கடை குறித்த சுவரொட்டிகள் போன்றவற்றை உங்கள் ஊரின் பல பகுதிகளில் மக்கள் கண்ணில் படும்படி வையுங்கள். 

ஆன்லைனில் ஸ்டோர் அமைக்கலாம். மொபைல் ஆப், வெப்சைட் மூலம் ஆன்லைன் வியாபாரம் செய்வதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள பலதரப்பட்ட மக்களிடத்தில் உங்களது கடை பற்றியும், விற்கப்படும் பொருட்கள் பற்றியும் விவரங்களை எளிதாக எடுத்து செல்ல முடியும். தற்போது பெரும்பாலான மக்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். 

சமூக வலைதளங்களில் உங்களது கடையின் பெயரில் கணக்குகள் தொடங்கி நீங்கள் விற்பனை செய்யும் பரிசு பொருட்கள் உள்ளிட்டவைகளை மக்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் பதிவிட்டு மார்கெட்டிங் செய்யலாம். 

மக்கள் வரவை அதிகரிக்கும் வழிகள்

நம் இந்தியாவில் வருடந்தோறும் விழாக்கள், விசேஷங்கள் என இருந்த வண்ணம் இருக்கும் பொழுது பரிசு பொருட்களின் விற்பனை வருடம் முழுவதும் நன்றாக தான் இருக்கும்.

இருப்பினும் மக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களையும் விற்பனைக்கு வைக்கும் பொழுது, மக்கள் வரவு அதிகமாக இருக்கும். வருபவர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கும் பரிசு பொருட்களை வாங்கும் வாய்ப்பும் அதிகம். 

குழந்தைகளுக்கான பொம்மைகள், பேட் (Bat), பந்து போன்ற விளையாட்டு பொருட்கள் அனைத்தும் வாங்கி வையுங்கள். 

தின்பண்டங்கள், பானங்கள் போன்றவையும் கடைகளில் விற்பனை செய்யலாம். உங்களுக்கென ஓர் தனித்தன்மை பெற ஆரோக்கியம் நிறைந்த தின்பண்டங்கள், பானங்களை விற்பனைக்கு வையுங்கள். 

பரிசு பொருட்களைப் பெட்டிகளில் வைத்து அழகாக கலர் பேப்பர்கள், கலர் ரிப்பன்கள், ஸ்டிக்கர்கள், பிளாஸ்டிக் பூக்கள் போன்றவை வைத்து அலங்கரித்து கொடுங்கள். இதற்காக ஒரு பணியாளர்களையும் பணிக்கு அமர்த்துங்கள். கலர் பேப்பர்கள், கலர் ரிப்பன்கள் போன்றவற்றிற்கான விலையினையும் நீங்கள் இலாபம் வைத்து வாங்கி கொள்ள முடியும். 

பூக்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட மலர் கொத்துகள், மலர் பரிசுகள், கூடைகள், தொப்பிகள் போன்றவைகளும் கிஃப்ட் கடைகளுக்கு மிகவும் பொருத்தமான விற்பனை பொருட்கள் ஆகும். ஆனால் பூக்கள் எளிதில் ஓரிரு நாளில் காய்ந்து அல்லது அழுகி விடும் என்பதால் தேவைக்கு ஏற்ற அளவு மட்டும் விற்பனைக்கு வையுங்கள். இல்லையென்றால் வரும் ஆர்டர்களுக்கு ஏற்ப அதிகம் தேவைப்பட்டால், அதற்கேற்ப மட்டும் வாங்கி மறுவிற்பனை செய்யுங்கள். 

பார்ட்டிகள், விழாக்களில் அலங்காரம், திட்டமிடல் செய்து கொடுத்தல்

இன்றைய காலங்களில் பிறந்த நாள், கல்யாண நாள், திருமணம் உள்ளிட்ட விழாக்களில் மேடை அலங்காரம், பரிசு பொருட்கள், நிகழ்ச்சி வடிவமைப்பு, சர்ப்ரைஸ் வடிவமைப்பு போன்றவற்றையும் செய்து கொடுக்கும் இவெண்ட் பிளானிங்கையும் (Event Planning) நீங்கள் எடுத்து செய்யலாம். இதன் மூலம் அதிக இலாபம் பெற முடியும். 

இலாபம் எவ்வளவு கிடைக்கும்?

உங்கள் கடைக்கான பொருட்களை மொத்த விற்பனை செய்பவர்களிடம் இருந்து வாங்குங்கள். இதன் மூலம் மிக குறைந்த விலைக்கு வாங்கி நல்ல இலாபம் வைத்து விற்க முடியும். பொதுவாக கிஃப்ட் போன்ற பரிசு பொருட்களுக்கு 5 சதவிகிதம் முதல் 7.5 சதவிகிதம் வரை வாங்கிய விலையில் இலாபம் வைத்து விற்கின்றனர். 20 முதல் 30 சதவிகிதம் வரையும் பெரிய அளவிலான கிஃப்ட் கடைகளில் இலாபம் வைத்து விற்கின்றனர். 

பிற கடைகளில் இருந்து தனித்து விளங்க, புதுமைகளை புகுத்தி, சக காலத்திற்கு ஏற்ற முறைகள், கால மாறுதலுக்கு ஏற்றவற்றை நீங்கள் நடைமுறைபடுத்தி வரும் போது நல்ல இலாபமும் வளர்ச்சியும் கிஃப்ட் தொழிலில் பெற முடியும். 

Recent Posts