பொருளடக்கம்
- இந்தியாவில் ஜுஸ் தொழில்
- ஜுஸ் தொழிலில் என்ன செய்கிறார்கள்?
- ஜுஸ் தொழில் வகைகள்
- ஜுஸ் தொழில் செய்ய பெறவேண்டிய உரிமங்கள் மற்றும் ஆவணங்கள்
- ஜுஸ் தயாரிக்க தேவையான உபகரணங்கள்
- ஜுஸ் வியாபார உத்திகள்
- ஜுஸ் தொழிலில் இலாபம்
இந்தியாவில் ஜுஸ் தொழில்
இந்தியாவின் தட்ப வெப்பநிலை என்பது பல்வேறு விதமான காலநிலைகளைக் கொண்டது. குறிப்பாக, இந்தியாவானது ஒரு வெப்ப மண்டல நாடாக இருப்பதனால், இங்கு நிலவும் கோடை காலத்தின் போது, கோடை வெப்பத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, தங்கள் உடலின் நீர் தேவையினையும், ஆற்றல் (Energy) தேவையினையும் பூர்த்தி செய்ய மக்கள் பெரிதும் நாடுவது ஆரோக்கியமான மற்றும் உடலுக்கு கேடு விளைவிக்காத பழச்சாறுகள் தான்.
சில காலங்கள் முன்பு, மக்களிடையே பதப்படுத்தப்பட்ட பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்கள் மீது ஈர்ப்பு அதிகரித்து இருந்தது என்னவோ நாம் அனைவரும் ஒப்பு கொள்ள வேண்டிய ஒன்றாகும். அவ்வாறு எளிதில் கிடைக்கக்கூடிய ஃபாஸ்ட் புட் உணவுகள், பாட்டில்களில் அடைக்கப்பட்ட பதப்படுத்திகள் போன்ற இரசாயனங்கள் கலந்த பானங்கள் உள்ளிட்டவையால் விளையும் ஆரோக்கிய பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிக அளவில் பெருகி வருகிறது. ஆதலால் ஆர்கானிக் உணவுகள் குறித்த விழிப்புணர்வும் ஈர்ப்பும் சில காலமாகவே வெகு வேகமாக பரவி வருகிறது.
வெயில் காலங்களில் மக்கள் தங்களது உடலுக்கான நீர் தேவை மற்றும் ஆற்றலுக்கு, இயற்கையாகக் கிடைக்கக்கூடிய ஃப்ரெஷ்ஷான பழங்களில் இருந்து நேரடியாக, ஆர்டர் செய்யும் போது தயாரித்து கொடுக்கப்படும் பழச்சாறு பருகுவதில் உறுதியாக உள்ளன. அவசர வாழ்க்கையின் இடையே ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது மிக முக்கியமானது என்ற விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் உள்ளது.
ஜுஸ் தொழிலில் என்ன செய்கிறார்கள்?
சீசனில் கிடைக்கக்கூடிய பழங்கள் வாங்கி, பழச்சாறு தயாரித்து கொடுக்கிறார்கள். இயற்கை ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் ஏற்ற பழங்களைக் கொடையாக வழங்குகிறது. கோடை காலத்தில் கிடைக்கக்கூடிய தர்பூசணி, சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி, எலுமிச்சை போன்றவைகள், ஆப்பிள், சப்போட்டா, கொய்யா, மாம்பழம் ஆகியவை கோடை காலத்தில் ஏற்படும் உடலின் வறண்ட நிலைக்கு தீர்வாக மட்டுமில்லாமல், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் பலவற்றையும் கொண்டு இருக்கின்றன.
ஜுஸ் கடைகளில் பழச்சாறு உடன், ப்ரூட் சாலட், மில்க் ஷேக், கரும்பு சாறு, இளநீர், லெஸ்ஸி, தண்ணீர் பாட்டில்கள், வெள்ளரி, சர்பத், நன்னாரி, கம்பங்கூழ் ஆகியவைகளும் மக்கள் விரும்புவதால் விற்பனை செய்கிறார்கள்.
இவைகளோடு பிற மூலிகை சாறுகளான அருகம்புல், நெல்லிக்காய், பாகற்காய், கற்றாழை (ஆலோ வேரா) போன்றவைகளும் அவற்றின் ஆரோக்கிய பலன்கள் காரணமாக மக்களிடையே வரவேற்பினை பெற்று வருகிறது. ஜுஸ் கடைகளில் இவற்றினையும் விற்பனை செய்கிறார்கள்.
ஜுஸ் தொழில் வகைகள்
குறைந்த முதலீட்டில் தள்ளுவண்டிகளில் கூட ஆரம்பிக்கலாம். இதன் மூலம் கடைக்கு செலுத்த வேண்டிய வாடகை இல்லை. வேலையாட்கள் அதிகம் தேவையில்லை. இது ஒரு கோடை பருவ தொழில் என்பதால், தள்ளுவண்டிகளில் தொழில் செய்யும் போது, மழை உள்ளிட்டவை குறித்த கவலையும் இல்லை. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக இடம்பெயர்ந்து வியாபாரம் செய்யலாம். கோடை வெப்பத்தில் இருந்து உங்களையும், மூலபொருட்களான பழங்களையும் பாதுகாத்துக் கொள்ள, தள்ளு வண்டிகளிலே மேற்கூரை அமைத்து கொள்ளலாம்.
நமது நாட்டில் தள்ளுவண்டிகள் என்றாலே தரம் குறைந்தவையாக பார்க்கப்படும் மனநிலையுள்ளது. இருப்பினும் சுகாதாரத்தில் கவனம் செலுத்தி, வாடிக்கையாளர்களிடம் நல்ல உறவினை மேம்படுத்தி கொள்ளும் தள்ளுவண்டி தொழில் செய்பவர்களும் மக்களின் விருப்பத் தேர்வாகவும் உள்ளனர்.
இன்னும் புதுமையாக, வெளிநாடுகளில் உள்ளது போன்று வாகனத்தோடு இணைந்த, அழகிய வேலைப்பாடுகளுடன் கண்ணைக் கவரும் தோற்றம் கொண்ட மொபைல் வண்டிகளில் ஜுஸ் தொழில் செய்யலாம். உங்கள் ஊரில் அதிகம் மக்கள் கூடும் பகுதிகளுக்கு எளிதாக சென்றடைந்து விற்பனை செய்யலாம். இதுபோன்ற வாகனங்கள் மக்களிடையே ஈர்ப்பை ஏற்படுத்தி உள்ளன.
அடுத்ததாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடை அமைத்து ஜுஸ் தொழில் செய்யலாம். வாடிக்கையாளர்கள் அமர்ந்து பருக தேவையான உள்கட்டமைப்புகளான இருக்கைகள், மேஜைகள், குளிரூட்டி, மின்விசிறிகள், மொலோடி உள்ளிட்ட இதமான இசைகள் இசைத்தல், தொலைக்காட்சி உள்ளிட்டவைகளை உங்களது விருப்பம், வசதி, முதலீட்டின் அளவு ஆகியவற்றை பொருத்து அமைத்து கொடுக்கலாம்.
ஜுஸ் தொழில் செய்ய பெறவேண்டிய உரிமங்கள் மற்றும் ஆவணங்கள்
உணவு மற்றும் சேவை சார்ந்த தொழிலாக இருப்பதால், ஜுஸ் தொழில் தொடங்க நினைப்பவர்கள் பின்வருவனவற்றை பெறுதல் அவசியம்.
டிரேட்மார்க்: ஒரு நிறுவனமாக செயல்படும் போது, உங்களது தனித்தன்மை மற்றும் அடையாளத்தை நிலைநிறுத்திக் கொள்ள அல்லது பாதுகாத்துக் கொள்ள டிரேட்மார்க் பெறுதல் உபயோகமான ஒன்று. ஒரு அட்வோகேட் மூலம் இதற்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.
FSSAI சான்று: எந்தவொரு உணவு பொருளுக்கும் இந்திய அரசின் ‘’உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம்” (FSSAI – Food Safety and Standard Authority of India) -த்திடம் இருந்து சான்று பெற வேண்டும். ஆதலால் ஜுஸ் வியாபாரம் செய்யும் நீங்களும் FSSAI சான்று பெறுதல் அவசியம்.
ஜி.எஸ்.டி: ஜுஸ் தொழில் ஒரு சேவை தொடர்புடைய ஒரு தொழில் என்பதால் ஜி.எஸ்.டி கட்டாயம் ஆகும். ஒரு அக்கவுண்டென்ட், சிஏ போன்றவர்களின் உதவி மூலம் உங்களது கடைக்கான ஜி.எஸ்.டி பதிவினை எளிதாக ஆன்லைன் மூலம் செய்து கொள்ளலாம்.
ஜுஸ் தயாரிக்க தேவையான உபகரணங்கள்
சிறிய அளவிலான கடை என்றால் இல்லங்களில் பயன்படுத்தப்படும் மிக்ஸியினையே ஜுஸ் தயாரிக்க பயன்படுத்தி கொள்ளலாம். விரைவாகவும், குறைந்த நேரத்தில் அதிக பழச்சாறுகள் தயாரிக்கவும் சில உபகரணங்கள் ஜுஸ் தொழிலில் தேவைப்படுகின்றன.
- பழங்களின் தோல் உரிக்கும் கருவி
- கத்தி
- ஜுஸ் தயாரிக்கும் இயந்திரங்கள் (Automatic and/or Manual)
- கிளாஸ்கள் (Glasses)
- கப்புகள் (Paper Cups / Eco friendly cups)
- குளிர்சாதன பெட்டி (Refrigerator)
- தெர்மோகோல் பெட்டி
- டிஷ் வாஷர் (Dish Wash)
- ஐஸ் வைக்கும் பெட்டி
மூலப்பொருட்களான பழங்களைத் தினந்தோறும் ஃப்ரெஷ்ஷாக வாங்கி பயன்படுத்துங்கள். உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள சந்தைகளில் இருந்து மொத்த கொள்முதல் மூலமாக, சற்று குறைந்த விலைக்கு வாங்கி கொள்ளுங்கள்.
ஜுஸ் வியாபார உத்திகள்
தொழில் தொடங்குவது எளிது என்றாலும், சிறப்பாக அதனை நடத்தி சென்று இலாபம் பார்ப்பதில் உள்ள உத்திகள் அறிந்து, அதன்படி செயல்படும் போது தான் அத்தொழிலில் வெற்றி பெற முடியும்.
- தள்ளுவண்டி, மொபைல் ஜுஸ் கடை, நிலையான கடை என எதுவாக இருப்பினும், மக்களைக் கவரக் கூடிய ஓர் தோற்றத்தினை உறுதி செய்து கொள்ளுங்கள். பகலிலும் நன்றாக தெரியும் படி, பெயர் பலகைகள் வையுங்கள். மாலை, இரவு நேரங்களில் கண்ணை கவரும் வண்ணம் லைட்கள் அமைத்திடுங்கள்.
- மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிறுத்தங்கள், பஸ் நிலையங்கள், சந்தை பகுதிகள், பள்ளிகல்லூரிகள், இரயில் நிலையங்கள், பார்க்குகள், கோவில்கள் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்கள் போன்றவை ஜுஸ் தொழில் செய்ய ஏற்ற இடங்களாகும்.
- மார்கெட்டிங்: உங்கள் கடைகளின் முன்பு, உங்கள் கடைகளில் கிடைக்கும் ஜூஸ்கள் உள்ளிட்டவற்றின் பெயருடன் விலையும் சேர்த்த மெனு பட்டியலை அழகாக வடிவமைத்து காட்சிப்படுத்தலாம். சமூக வலைதளங்களில் உங்களது நிறுவனத்திற்கான கணக்குகளைத் தொடங்கி, உங்கள் கடையின் சிறப்பு, தயாரிக்கப்படும் ஜூஸ்கள், அவற்றின் பலன்கள் போன்றவற்றை பதிவிடலாம். அருகிலுள்ள உணவகங்கள் போன்றவற்றிடம் இருந்தும் அவர்களது திடீர் தேவைக்கு ஏற்ப ஆர்டர்கள் பெற அவர்களிடம் உங்களை அறிமுகப்படுத்தி வைத்து கொள்ளுங்கள். கல்யாணம் போன்ற விசேஷங்களில் சப்ளை செய்ய, கேட்டரிங் சர்வீஸ் நிறுவனங்களுடனும் உறவு வளர்த்து கொள்ளுங்கள். கோவில் திருவிழாக்கள் போன்றவற்றிலும் ஸ்டால்கள் அமைக்க தேவையான ஏற்பாடுகள் செய்து கொள்ளுங்கள். பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்யுங்கள். உங்கள் கடை இருக்கும் இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் பார்க்கும் வண்ணம் விளம்பர பலகைகள் வையுங்கள்.
- ஜுஸ் அல்லது பழச்சாறு மட்டுமில்லாமல், முன்பே குறிப்பிட்டது போன்று பழ சாலட், மில்க் ஷேக், வெள்ளரி போன்றவைகளும் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும்.
- மூலிகை சாறுகள் மீதும் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட மக்களின் கவனம் திரும்பி இருப்பதால், மூலிகை சாறுகளையும் விற்பனை செய்யலாம். பொதுவாக இவை வெறும் வயிற்றில் குடிக்க பரிந்துரைக்கப்படுவதால், காலை வேளையில் வாக்கிங், உடற்பயிற்சியில் ஈடுபட்ட பின், பருக மக்கள் விரும்புகின்றனர். மேலும் இந்த மூலிகை சாறுகள் பெரும்பாலும் குளிர்ச்சி ஏற்படுத்தாதவை என்பதால் அதிகாலை வேளைகளிலும், மாலை நேரங்களிலும் இவற்றினை விற்பனை செய்யலாம்.
- கரும்பு சாறு எடுக்கும் இயந்திரம் வைக்க இடம் இருந்தால், கரும்பு சாறும் விற்பனை செய்யலாம்.
- இன்றைய காலக்கட்டத்தில் வெள்ளை சர்க்கரையை உடல்நலம் கருதி பலரும் தவிர்க்க விரும்புவதை கருத்தில் கொண்டு, தயாரித்து கொடுக்கப்படும் ஜுஸ்களில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக, கரும்பு சர்க்கரை, கருப்பட்டி, பனை வெல்லம் போன்றவைகளையும் ஓர் தேர்வுகளாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கி அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப, அதனையே பயன்படுத்தி ஜுஸ் தயாரித்து கொடுங்கள். இது உங்களுக்கென ஓர் தனித்தன்மையை கொடுக்கும். மேலும் நடுத்தர மற்றும் வயது மூத்தோர்கள், சர்க்கரை நோயாளிகள் இடையே ஓர் வரவேற்பை பெற்று தரும். எந்தவித சர்க்கரையும் இன்றி அப்படியே பழங்களை ஜுஸ் செய்து குடிப்பதும் ஆரோக்கியமானது தான்.
- சுகாதாரம் மிகவும் முக்கியம். ஜுஸ் தயாரிப்பவர்கள், கையுறைகள் மற்றும் தலைக்கு கேப்புகள் (Cap) அணிந்து இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
- பழங்கள் பிழிந்து ஜூஸ்கள் தயாரிக்கப்படுவதால், எளிதாக ஈக்கள் மற்றும் இனிப்பு தன்மை படிந்த பிசுபிசுப்பு ஆகியவை காணப்படும். ஆதலால் பழத்தோல்கள் மற்றும் பிழிந்தெடுக்கப்பட்ட சக்கைகள் போன்றவற்றை குப்பைத் தொட்டிகளில் மூடி வையுங்கள். அவற்றை தினந்தோறும் அகற்றி விடுங்கள். இல்லையேல் துர்நாற்றம் வர ஆரம்பித்து விடும். ஜுஸ் தயார் செய்யும் பகுதியினை தொடர்ந்து சுத்தம் செய்த வண்ணம் இருத்தல் அவசியம்.
- குழந்தைகளை கவரும் வகையில், சிலபல தின்பண்டங்கள் போன்றவைகளையும் விற்பனை செய்யலாம். பற்பல பாரம்பரிய ஊட்டச்சத்து நிறைந்த தின்பண்டங்களை, இன்றைய தலைமுறையினர் விரும்பும் வகையில் உற்பத்தி செய்பவர்களும் அதிகரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து வாங்கி ஆரோக்கியத்திற்கு ஏற்ற அத்தகைய தின்பண்டங்களை கடையின் முகப்பு, பணம் செலுத்தும் இடம் அல்லது பில் போடும் இடங்களில் விற்பனைக்கு வைக்கலாம்.
ஜுஸ் தொழிலில் இலாபம்
ஜுஸ் தொழில் அதிக இலாபம் ஈட்டக் கூடிய ஓர் தொழில். ஆமாம். தேவையும் வாடிக்கையாளர்களும் அதிகம் உள்ள, குறிப்பாக கோடை காலத்தில் நல்ல வருமானம் பெற்று தரக்கூடிய ஓர் தொழில் தான் ஜுஸ் தொழில். இதில் இலாபம் பார்க்க, உங்களது செலவினங்கள், விலை நிர்ணயம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் போதும். நீங்கள் ஜுஸ் தொழிலுக்கு புதியவராக இருந்தாலும், 50 முதல் 70 சதவிகிதம் வரை இத்தொழிலில் இலாபம் ஈட்ட முடியும். கோடை காலத்தில் தான், அதிக தேவையுள்ள தொழிலாக ஜுஸ் தொழில் இருப்பதால், ஏற்கனவே பிற பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து இருப்பவர்கள் கூட, சிறிய இடம் ஒதுக்கி கோடை காலத்தில் மற்றுமொரு துணை தொழிலாகவும் ஜுஸ் வியாபாரம் செய்து இலாபம் பார்க்கலாம்.