குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME – Micro, Small, and Medium Enterprises)


பொருளடக்கம்

  • ஓர் அறிமுகம்
  • குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME – Micro, Small, and Medium Enterprises) என்றால் என்ன?
  • MSME -யின் கீழ் வரும் தொழில்கள் என்னென்ன?
  • MSME தொழில் தொடங்குவதற்கான படிநிலைகள்
    •  முதலீடு
    • பதிவு உள்ளிட்ட நிபந்தனைகள்
    • விளம்பரப்படுத்தல்
    • பணியாளர்கள்
    • புதுமைகள், புதிய தொழி்ல்நுட்பங்கள்
  • இந்தியாவில் MSME சார்ந்த தொழில் செய்ய உதவிடும் அரசாங்க திட்டங்கள்
  • இந்தியாவில் MSME சார்ந்த தொழிலில் வெற்றி பெறுவது எப்படி?

ஓர் அறிமுகம்

        காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலான மாத சம்பள வேலையில் இருந்து விலகி, உங்களது யோசனைகள், அனுபவத்தை வைத்து புதியதாக தொழில் தொடங்க விரும்புகிறீர்களா? உங்களது வழக்கமான மாதாந்திர சம்பளம் பெறும் வேலையுடன் உங்களது மேல் வருமானத்திற்கு என்று ஓர் தொழில் தொடங்க நினைக்கிறீர்களா? நீங்கள் சேர்த்து வைத்து இருக்கும் சேமிப்பு தொகையில் இருந்து ஒரு பகுதியினை முதலீடு செய்து ஒருமுறை தொழில் செய்து எவ்வாறு இருக்கும் என்று பார்க்கலாம் என்ற மனவோட்டத்தில் இருக்கிறீர்களா? நீங்கள் அனைவரும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME – Micro, Small, and Medium Enterprises) அமைப்பது தான் சிறந்த தேர்வாக இருக்கும். 

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME – Micro, Small, and Medium Enterprises)  என்பவை குறைந்த முதலீட்டில் இயங்கக்கூடிய நிறுவனங்கள் ஆகும். குறைந்த முதலீட்டில் சிறுகுறு அளவில் உற்பத்தி செய்து சந்தை தேவையை பூர்த்தி செய்கின்றனர். இந்தியாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME – Micro, Small, and Medium Enterprises) வளர்ச்சி, தொழில் செய்ய தேவையான சாதகமான சூழல், இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் ஊக்குவிப்புகள் உள்ளிட்டவற்றை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. 

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME – Micro, Small, and Medium Enterprises) என்றால் என்ன?

         தொழில் துறையில் MSME என தனியாக ஓர் பிரிவினை அரசாங்கம் ஏற்படுத்த காரணம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு தேவையான நிதி உதவி வழங்கவும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் ஈடுபட மக்களை ஊக்குவிக்கவும் தான். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்குவிக்க இந்திய அரசு அதிக அளவிலான திட்டங்கள், மானியங்கள், சலுகைகள் வழங்க இத்தகைய தனி பிரிவு உபயோகமாக இருந்து வருகிறது. 

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக 30 சதவிகிதம் MSME பிரிவில் இருந்து கிடைக்கிறது. மேலும் உற்பத்தி துறையில் இருந்து மட்டும் 45 சதவிகிதமும், ஏற்றுமதி துறையில் இருந்து 48 சதவிகிதமும் MSME- யில் இருந்து கிடைக்கிறது. ஆதலால் MSME துறை என்பது இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

MSME பிரிவினை மேம்படுத்தவும், மேலும் பல தொழில்களை MSME பிரிவின் கீழ் கொண்டு வந்து பலதரப்பட்ட திட்டங்களின் மூலம் அவர்களை பயனுற செய்யவும் Micro Mini and Small Enterprises Development Act 2006-யில் MSME-க்கான வரையறை வழங்கப்பட்டது. அதன்படி உற்பத்தி மற்றும் சேவை பிரிவின் கீழ் உள்ள தொழில்களும் MSME பிரிவின் கீழ் வரும் என அறிவிக்கப்பட்டது. 

பலதரப்பட்ட தொழில்களும் MSME பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டதால், முதலீடு மற்றும் விற்பனையை அடிப்படையாகக் கொண்டு MSME-க்கான வரையறையினை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி 2021 ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி அறிவித்தார். மேலும் மொத்த விற்பனையாளர்கள், சில்லறை வியாபாரிகளும் MSME பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டன. இதன் மூலம் எறத்தாழ 2.5 கோடி மொத்த விற்பனையாளர்கள், சில்லறை வியாபாரிகளும் அரசிடம் இருந்து கிடைக்கும் MSME-க்கான திட்டங்கள் மூலம் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புதிய வரையறையின் படி, 

  • 1 கோடி வரையிலான முதலீடும், 5 கோடி வரையிலான விற்பனையும் கொண்ட நிறுவனங்கள் குறு நிறுவனங்கள் என்றும், 
  • 10 கோடி வரையிலான முதலீடும், 50 கோடி வரையிலான விற்பனையும் கொண்ட நிறுவனங்கள் சிறு நிறுவனங்கள் என்றும், 
  • 50 கோடி வரையிலான முதலீடும், 250 கோடி வரையிலான விற்பனையும் கொண்ட நிறுவனங்கள் நடுத்தர நிறுவனங்கள் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் பலதரப்பட்ட சேவை, உற்பத்தி, வணிகம் தொடர்பான தொழில்கள் உள்ளன. இந்திய அரசாங்கம் MSME -யாக கருதப்படும் ஒரு குறிப்பிட்ட தொழில்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அவற்றினை பற்றியும், MSME துறையில் வெற்றி பெற தேவையான வியாபார உத்திகள் குறித்தும் இன்னும் விரிவாக காணலாம். 

MSME -யின் கீழ் வரும் தொழில்கள் என்னென்ன?

MSME அமைச்சகம் வெளியிட்டு உள்ள MSME-க்கான வரையறையின் கீழ் வரும் தொழில்களுக்கான சில உதாரணங்களை இப்பகுதியில் காணலாம். 

  • வாகன மின்னணு கூறு தயாரிப்பு (Automotive electronic component products)
  • பொறியியல் மற்றும் உருவாக்கம் (Engineering and fabrication)
  • தொழிற்சாலைகளுக்கான சோதனை ஆய்வகங்கள் (Testing labs for industries)
  • மரச்சாமான்கள் மற்றும் மர பொருட்கள் (Furniture and wood products)
  • வேலை வாய்ப்பு மற்றும் மேலாண்மை ஆலோசனை சேவைகள் (Placement and management consultancy services)
  • பிளாஸ்டிக் பொம்மைகள், சீப்புகள் போன்ற பொருட்களை மோல்டிங் செய்தல். (Moulding of products)
  • லாண்டரி மற்றும் டிரை கிளினிங் (Laundry and dry cleaning)
  • நூற்பு (Spinning), நெசவு, கைவினைஞர்கள், கைவினைப் பொருட்கள் (Handicraft activities)
  • சர்வர்கள் உருவாக்கி தருதல், ஆப்களுக்கான சர்வீஸ் வழங்குதல் உள்ளிட்ட ஐடி தொடர்பான சேவைகள்
  • கோழி பண்ணை
  • ஃபோட்டோ ஸ்டுடியோ
  • கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்
  • கணினிமயமாக்கப்பட்ட பேக் ஆபீஸ் ஆபரேஷன்
  • காதி பொருட்கள்
  • தென்னை நார் தொழில்
  • லெதர் பொருட்கள் 
  • எக்ஸ்ரே மையங்கள்
  • சைக்கிள் பாகங்கள் தயாரிப்பு
  • டிராக்டர் போன்ற விவசாய இயந்திரங்களுக்கான சர்வீசிங்
  • ஸ்டேசனெரி பொருட்கள்
  • அழகு நிலையங்கள்
  • உள்ளாடைகள் 
  • Cutters, Volve போன்ற மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
  • உபகரணங்களை வாடகை மற்றும் குத்தகைக்கு விடுதல்
  • ஆயுர்வேத பொருட்கள்
  • குழந்தைகள் காப்பகம்
  • பிரிண்டிங்
  • செராமிக்ஸ்
  • ஜெராக்சிங்
  • கார் மற்றும் மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் சர்வீஸ்
  • டிஷ் மற்றும் கேபிள் டிவி
  • இரப்பர் பொருட்கள்
  • ரேடியோக்கள், மோட்டார்கள், கடிகாரங்கள், டிரான்ஸ்பார்மர்கள்
  • கிரானைட், ஃப்ளோரிங் மற்றும் ரூஃபிங் டைல்ஸ்
  • கால் சென்டர்
  • குறைந்த முதலீடு கொண்ட சில்லறை வணிகம்
  • மொத்த விற்பனை
  • மெழுகுவர்த்தி தயாரிப்பு
  • பேக்கரி
  • இயற்கை உரங்கள் தயாரிப்பு
  • டீ – ஷர்ட் பிரிண்டிங்
  • செல்போன் பாகங்கள் தயாரிப்பு
  • பிளாஸ்டிக் மறுசுழற்சி
  • முந்திரி தொழில்
  • ரைஸ் மில்
  • தேன் தொழில்
  • பயோ டீசல் உற்பத்தி
  • தின்பண்டங்கள் தயாரிப்பு
  • காளான் வளர்ப்பு
  • விளையாட்டு சாதனங்கள் தயாரிப்பு
  • சணல் பைகள் & பேப்பர் பைகள் தயாரிப்பு
  • எனர்ஜி பிசினஸ்
  • கொரியர் கம்பெனி
  • ஆன்லைன் வணிகம்
  • கன்சல்டன்சி 
  • ஹோட்டல்கள்
  • டிராவல் ஏஜெண்ட்
  • டிரான்ஸ்போர்ட்டேஷன் பிசினஸ்
  • மெடிக்கல் டூரிசம்
  • சலூன்
  • ஹோம்ஸ்டே (Homestays)

MSME தொழில் தொடங்குவதற்கான படிநிலைகள்

       MSME தொழில் தொடங்குவதில் உள்ள சாதகங்கள், வாய்ப்புகள், தொழில் தொடங்குவதற்கு முன்னர் செய்ய வேண்டியவை, தொழில் தொடங்க தேவையானவை, தொழிலினை இலாபகரமாக நடத்தி செல்ல செய்ய வேண்டியவை உள்ளிட்டவை பற்றி காணலாம். 

முதலீடு: பெரிய அளவில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது MSME போன்ற தொழிலுக்கு தேவையான முதலீடு குறைவு தான். ஆனால் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு தேவையான முதலீடினை ஏற்பாடு செய்வது ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருக்கலாம். இருப்பினும் தனியார் நிதி நிறுவனங்களை தேடி செல்லாமல், MSME தொழிலுக்கென அரசாங்கத்தினால் வழங்கப்படும் பல நிதி தொடர்பான திட்டங்கள், அரசு வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளால் வழங்கப்படும் நிதி உதவிகளை தேர்ந்தெடுங்கள். 

பதிவு உள்ளிட்ட நிபந்தனைகள்:  MSME பிரிவின் கீழ் தவறாது பதிவு செய்து கொள்ளுங்கள். அப்பொழுது தான் MSME திட்டங்கள் மூலம் பயன்பெற முடியும். முதலில் உங்களது தொழிலுக்கான பதிவினை செய்யுங்கள். வங்கி பரிவர்த்தனைகளுக்கு உங்கள் நிறுவனத்தின் பெயரில் PAN கார்ட் பதிவு செய்து பெற்று கொள்ளுங்கள். உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழிலுக்கு GST எண் பதிவு செய்து வாங்கி கொள்ளுங்கள். 

விளம்பரப்படுத்தல்: உங்கள் பகுதியில் உள்ள சந்தை நிலவரம், உங்களது வாடிக்கையாளர்களாக மாற வாய்ப்பு உள்ளவர்கள், தேவைக்கான இடங்கள் என உள்ளிட்டவற்றை நோக்கி உங்களது விளம்பரங்கள் இருக்க வேண்டும். குறைந்த முதலீட்டில் இயங்கும் தொழில் என்பதால் அதிக பலன் தரக்கூடிய குறிப்பிட்ட விளம்பர உத்திகளை மட்டும் தேர்ந்தெடுத்து விளம்பர செலவுகளை கட்டுக்குள் வைத்து கொள்ளுங்கள். 

பணியாளர்கள்: MSME சார்ந்த தொழிலுக்கு பணியாளர்கள் கிடைப்பதும் ஒரு சவாலாக இருந்தாலும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சகத்தால் திறன் வளர்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு MSME சார்ந்த தொழில்களுக்கான பணியாளர்கள் கிடைக்கும் சூழ்நிலை உருவாக்கப்பட்டு உள்ளது. 

புதுமைகள், புதிய தொழி்ல்நுட்பங்கள்: தொழில் சார்ந்த போட்டியாளர்கள் அதிகம் உள்ள MSME துறையில் புதுமைகள், புதிய சிந்தனைகள், அணுகுமுறைகள், புதிய தொழி்ல்நுட்பங்களின் பயன்பாடு ஆகியன உங்களது தொழிலுக்கான முன்னேற்றத்தினையும், தனித்தன்மையும் தரும். 

இந்தியாவில் MSME சார்ந்த தொழில் செய்ய உதவிடும் அரசாங்க திட்டங்கள்

         MSME சார்ந்த தொழில் தொடங்க தேவையான சூழல் இந்தியாவில் நிலவுவதை பின்வரும் திட்டங்கள் மூலம் நீங்கள் புரிந்து கொள்ளலாம். 

  • Entrepreneurship and Skill Development Programme (ESDP) Scheme

            இத்திட்டம் மூலம் தொழில்     முனைவராக தேவையான திறன் வளர்ப்பு மற்றும் பயிற்சி வழங்கப்படுகிறது. 

  • Prime Minister Employment Generation Programme (PMEGP)

உற்பத்தி துறையில் 25 இலட்சம் வரையிலான மதிப்புள்ள எந்தவொரு புதிய தொழில் முன்னெடுப்பிற்கும், சேவை துறையில் 10 இலட்சம் வரையிலான மதிப்புள்ள தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கும் தேவையான நிதி உதவி இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. 

  • Credit Guarantee Trust Fund for Micro & Small Enterprises (CGTMSE)

MSME அமைச்சகத்தால் கொண்டு வரப்பட்டு உள்ள இந்த திட்டத்தினால் SIDBI (Small Industries Development Bank of India) வங்கி மூலம் நிதி உதவிகள் பெற முடியும். 

  • ZED Certification

ZED (Zero Effect and Zero Defect) என்றால் எந்தவொரு சேதாரமும், விளைவும் ஏற்படுத்தாதவை என பொருள் தரக் கூடியது. கழிவுகள், சேதாரங்களை குறைத்து, சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளிட்ட அனைத்து பாதிப்புகளையும் தவிர்க்கக்கூடிய உற்பத்தியையும், அத்தகைய உற்பத்தி திறனையும் மேம்படுத்த, MSME அமைச்சகத்தால் வழங்கப்படும் ஓர் சான்றாகும் இது.

  • Market Promotion & Development Scheme (MPDA)

கிராமப்புற தொழில்கள், கைவினை பொருட்கள், காதி பொருட்கள் போன்றவற்றை ஊக்குவிக்கும் ஓர் திட்டம் ஆகும். 

  • Interest Subsidy Eligibility Certificate (ISEC)

காதி மற்றும் கிராமப்புற தொழில்களை ஊக்குவிக்க இந்த சான்று வழங்கப்படுகிறது. 

  • National Manufacturing Competitiveness Programme (NMCP)

தொழில் செய்பவர்கள் இடையே ஆரோக்கியமான ஓர் போட்டி அமைத்து அதன் மூலம் வளர்ச்சியினை அதிகரிக்க கொண்டு வரப்பட்டு உள்ள ஓர் திட்டம் ஆகும். 

  • Revamped Scheme of Fund for Regeneration of Traditional Industries (SFURTI)

இந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் தொழில் துறைகள், கலைஞர்கள், கலைகள் ஆகியவற்றை மேம்படுத்தவும், அவர்களுக்கு நிலையான வருமானமானது நீண்ட காலம் கிடைப்பதை உறுதி செய்யவும் இத்திட்டம் உதவுகிறது. 

இந்தியாவில் MSME சார்ந்த தொழிலில் வெற்றி பெறுவது எப்படி?

தொழில் செய்ய தகுந்த சூழல், உதவிகள் அனைத்தும் தற்போது உள்ளன. நீங்கள் செய்ய வேண்டியது:

  • சரியான திட்டமிடல்
  • சந்தை நிலவரத்தை ஆராய்ந்து புரிந்து கொள்ளுதல் 
  • முதலீடு மற்றும் இதர செலவினங்களுக்கான நிதியினை சரியாக கையாளுதல்
  • தரமான சேவைகள் வழங்குதல் மற்றும் தரமான பொருட்களை உற்பத்தி செய்தல்
  • புதுமைகள் புது அணுகுமுறைகள் கொண்டு வருதல்
  • சந்தையில் தொழில் சார்ந்த நட்பு வட்டாரங்களை அமைத்து கொள்ளுதல்
  • புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் அம்சங்களை உங்கள் தொழிலில் அமைத்து கொள்ளல்
  • திறமையான நேர்மறையான பணியாளர்களை ஏற்படுத்தி கொள்ளுதல்
  • பணியாளர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குதல்
  • சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப உங்களை தகவமைத்து கொள்ளுதல்
  • வாடிக்கையாளர் சேவைகள்
  • தொழில் சார்ந்த ஒழுங்குமுறைகள் மற்றும் வருமான வரி உள்ளிட்டவற்றிற்கு தேவையான ஆவணங்கள், பதிவுகள் போன்றவற்றை சரிவர செய்து வருதல்

மேற்கூறிய அனைத்தும் தொழிலில் நிலையான இலாபமும், வளர்ச்சியும் பெற தொழில் செய்வோர் கடைப்பிடிக்க வேண்டியவை. தொழில் செய்ய ஏதுவான சூழ்நிலையும், வாய்ப்புகளும் உள்ளபோது உங்களது திறமைக்கேற்ற ஓர் தொழிலை தேர்ந்தெடுத்து நல்ல முன்னேற்றம் காணுங்கள்.

Recent Posts