மினரல் வாட்டர்/கேன் வாட்டர் தொழில்


பொருளடக்கம்

  • மினரல் வாட்டர்/கனிம நீர் ஆலை தொழில் – ஓர் அறிமுகம்
  • மினரல் வாட்டர் தொழிலுக்கும், பேக்கேஜிட் வாட்டர் தொழிலுக்கும் உள்ள வித்தியாசம்
  • மினரல் வாட்டர் தொழில் தொடங்க தேவையான முதலீடு
  • இடத்தேர்வு
  • கட்டிட வசதி
  • மினரல் வாட்டர் ஆலை தொடங்குவதற்கு தேவையான உரிமம் மற்றும் அங்கீகாரங்கள்
  • கனிம நீர் ஆலைக்கான இயந்திரங்கள் & சுத்திகரிப்பு நிலைகள்
  1. மண்ணை நீக்கும் நிலை
  2. ஆக்டிவேட்டட் கார்பன் ஃபில்டர்
  3. நுண்கிருமிகளை நீக்கும் நிலை
  4. தலைகீழ் சவ்வூடுபரவல் நிலை
  5. ஸ்டெர்லைசிங்
  6. புறஊதாக்கதிர்கள் பயன்படுத்துதல்
  7. புறஊதாக்கதிர்கள் பயன்படுத்துதல்
  8. இறுதி நிலை
  • திறமையான மற்றும் சுறுசுறுப்பான பணியாளர்கள்
  • வாட்டர் பாட்டில் சப்ளையர்களுடன் இணைதல்
  • முடிவுரை

மினரல் வாட்டர்/கனிம நீர் ஆலை தொழில் – ஓர் அறிமுகம்

இயற்கை வளங்களில் கிடைக்கும் தண்ணீரின் தூய்மையின்மை காரணமாக, தூய்மையான குடிநீருக்கான தேவை பெரும் அளவில் உள்ளது. பயணம் செய்வோர்க்கு மட்டுமின்றி வீட்டு உபயோகத்திற்கும், வணிக இடங்களிலும் பயன்படுத்த பெரும்பாலோனோர் மினரல் வாட்டர் கேன்களை வாங்கி பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். 

குடிநீர் தேவை என்றுமே நிரந்தரம் என்பதாலும், அதிக சந்தை வாய்ப்பு உள்ளதாலும் மினரல் வாட்டர் கேன் தொழில் மிகவும் இலாபகரமான ஒன்றாகும். வருங்காலங்களிலும் மினரல் வாட்டரின் தேவை அதிகம் இருக்கும் என கணிக்கப்படுவதாலும், கனிம நீர் ஆலை அல்லது மினரல் வாட்டர் தொழிலினை நீங்கள் தொடங்கினால், அதில் நிச்சயமாக அதிக இலாபம் பெற முடியும். 

மினரல் வாட்டர் தொழிலுக்கும், பேக்கேஜிட் வாட்டர் தொழிலுக்கும் உள்ள வித்தியாசம்

மினரல் வாட்டர் தொழிலுக்கும் பேக்கேஜிட் வாட்டருக்கும் வித்தியாசம் உள்ளதை முதலில் அறிந்து கொள்ளலாம். பேக்கேஜிட் வாட்டர் தொழில் என்பது போர்வெல் மூலம் பெறப்படும் நீரினை சுத்திகரித்து, தலைகீழ் சவ்வூடு பரவல் செயல்முறைக்கு உட்படுத்தி குடிநீராக மாற்றி பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வது ஆகும். 

ஆனால் மினரல் வாட்டர் தொழிலில் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். வாங்க. மினரல் வாட்டர் தொழில் எனும் கனிம நீர் ஆலையில் இயற்கை வளங்களான குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து நீரினை நேரடியாக சேகரித்து, அவற்றினை சுத்திகரித்து பாட்டில்களில் நிரப்பி விற்பனை செய்யப்படுகிறது. மினரல் வாட்டரின் தனிச்சிறப்பு என்னவென்றால்  நீர்நிலைகளில் இருந்து பெறப்படும் நீரில் பல கனிமங்கள்/மினரல்களான சோடியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் பல மினரல்கள் இருப்பதே ஆகும். 

மினரல் வாட்டர் தொழில் தொடங்க தேவையான முதலீடு

கனிம நீர் ஆலையான மினரல் வாட்டர் தொழில் தொடங்க எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பது உங்களது முதல் கேள்வியாக இருக்கும். குறைந்தபட்சம் பத்து இலட்சத்திலிருந்து முப்பது இலட்சம் வரை நீங்கள் முதலீடு செய்ய வேண்டி இருக்கும். 

இடத்தேர்வு

அடுத்தது நீங்கள் தொழில் செய்ய தேர்வு செய்ய வேண்டிய இடம். மினரல் வாட்டர் தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளான நீரினை நீங்கள் இயற்கை வளங்களான ஆறு, குளம், ஏரி போன்றவற்றில் எடுப்பதால், அத்தகைய நீர் நிலையங்களுக்கு அருகில் இடம் பார்ப்பது பொருத்தமாக இருக்கும். இல்லையெனில் நீரினை சேகரித்து பின்னர் உங்களது ஆலை இருக்கும் இடத்திற்கு கொண்டு வருவது என அதிகப்படியான வேலையும், செலவும் செய்ய வேண்டி இருக்கும்.

அதுமட்டுமின்றி உங்கள் ஆலைக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடமானது உற்பத்தி செய்யப்பட்ட வாட்டர் பாட்டில்களை சந்தைப்படுத்தும் இடத்திற்கு அருகாமையிலும் இருக்குமாறு பார்த்துகொள்ளுதலும் முக்கியம். சந்தைக்கு அருகில் ஆலை அமைப்பது அவசர தேவைக்கும், துரிதமான மற்றும் போக்குவரத்து  செலவுகள் குறைந்த சந்தைப்படுத்துதலுக்கும் பேருதவியாக இருக்கும். மேலும் நீங்கள் தேர்வு செய்யும் இடம் சாலை போக்குவரத்து வசதி கொண்டிருப்பதையும் உறுதிசெய்து கொள்ளுங்கள். 

கட்டிட வசதி

மினரல் வாட்டர் ஆலையில் பலதரப்பட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுவதால், அதற்கேற்றாற்போல் தண்ணீரை நிரப்ப ஓர் அறை, சுத்திகரிப்பு செய்ய ஓர் அறை, சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீரினைப் பரிசோதனை செய்ய ஓர் அறை என பலத்தரப்பட்ட செயல்பாடுகளை மேற்கொள்வதற்கென பல அறைகளாக பிரிக்கப்பட்ட குறைந்தபட்சம் இரண்டாயிரம் சதுர அடி கொண்ட கட்டிட வசதி வேண்டும். மின்சார தேவை 21-30 HP வரை தேவைப்படும். 

மினரல் வாட்டர் ஆலை தொடங்குவதற்கு தேவையான உரிமம் மற்றும் அங்கீகாரங்கள்

முதலில் சட்டரீதியான நிபந்தனைக்களுக்கு ஏற்ப உங்களது ஆலையினை ஒரு நிறுவனமாக பதிவு செய்துகொள்ள வேண்டும். உங்களுக்கேற்றவாறு பிரைவேட் லிமிடெட் கம்பெனியாகவோ, லிமிடெட் லையபிலிட்டி (Limited Liability) அல்லது கூட்டாண்மை போன்ற தேர்வுகளில் இருந்து ஒன்றினை, தேவைப்படின் சிஏ போன்றோரின் ஆலோசனை பெற்று தேர்வு செய்து கொள்ளுங்கள். 

SSI(Small Scale Industry) ரெஜிஸ்ட்டிரேஷன் செய்து கொள்வதன் மூலம் புதிதாக தொடங்கப்படும் சிறிய அளவிலான தொழில்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தால் வழங்கப்படும் மானியம் உள்ளிட்ட பயன்களைப் பெற்று கொள்ள முடியும். 

பிஐஎஸ் தரச்சான்று (BIS Registration certification) பெறுதல் கட்டாயமாகும். பிஐஎஸ் தரச்சான்று பெற நீர்நிலைகளில் இருந்து நேரடியாக பெறப்பட்ட நீரினையும், உங்களது கனிம நீர் ஆலையில் சுத்திகரிப்பு செய்த மினரல் வாட்டரினையும் உங்கள் ஊரில் உள்ள நீர் பரிசோதனை ஆய்வகத்தில் பரிசோதனை செய்து அறிக்கை பெற்று சமர்பிக்க வேண்டும். 

மாநில அரசாங்கத்திடமிருந்து அல்லது உள்ளூர் அரசாங்கத்திடமிருந்து மாசு கட்டுபாடு சான்றிதழ் பெறுதல் அவசியம்.

உங்களது பிராண்டின்(Brand) தனித்தன்மை, அடையாளத்தைத் தக்கவைத்து கொள்ள ட்ரேட்மார்க்(Trademark) பதிவு செய்து கொள்வதும் முக்கியமானது.

கனிம நீர் ஆலைக்கான இயந்திரங்கள் & சுத்திகரிப்பு நிலைகள்

கனிம நீர் ஆலையில் நீர்நிலைகளில் இருந்து பெறப்பட்ட நீரை பல்வேறு நிலைகளில் பலதரப்பட்ட இயந்திரங்கள் மூலம் பல நிலைகளில் சுத்திகரிப்பு செய்ய வேண்டும். ஒவ்வொரு நிலைகளையும் அவற்றில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் குறித்தும் காணலாம். வாங்க. 

மண்ணை நீக்கும் நிலை:

முதற்கட்டமாக நீர்நிலைகளில் இருந்து பெறப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ள தொட்டியில் இருந்து நீரானது கூழாங்கல், குறுமண் கொண்ட மண்ணினை நீக்கும் (Sand filter) இயந்திரத்தின் வழியே செலுத்தப்பட்டு, மண், தூசி மற்றும் அழுக்கு போன்றவை நீக்கப்படுகிறது. 

ஆக்டிவேட்டட் கார்பன் ஃபில்டர்:

சாண்ட் ஃபில்டரில் இருந்து வரும் நீரானது நிலக்கரி கொண்ட ஆக்டிவேட்டட் கார்பன் ஃபில்டர்(Activated Carbon Filter) இயந்திரத்துக்குள் செலுத்தப்பட்டு அதிக அழுத்தம் கொடுக்கப்படுவதால் நீரின் கடினத்தன்மை குறைவதோடு தூசி, அழுக்கு போன்றவையும் நீக்கப்படுகிறது. 

நுண்கிருமிகளை நீக்கும் நிலை:

மைக்ரான் ஃபில்டெர் வழியே பின்பு செலுத்தப்பட்டு மேற்கொள்ளப்படும் செயல்முறையின் மூலம் நுண்கிருமிகள் நீக்கப்படுகின்றன. 

தலைகீழ் சவ்வூடுபரவல் நிலை:

ரிவெர்ஸ் ஆஸ்மாசிஸ் எனப்படும் தலைகீழ் சவ்வூடு பரவல் முறையின் மூலம், நீரின் மீது கொடுக்கப்படும் அதிக அழுத்தத்தின் காரணமாக நீரில் காணப்படும் அதிகப்படியான உப்பு, இரும்பு, கால்சியம் போன்றவை தனியாக பிரித்து எடுக்கப்படுகிறது. இவ்வியந்திரத்தில் இரண்டு வெளிக்குழாய்கள் உள்ளன. ஒன்றின் வழியே சுத்திகரிப்பின் பின் நல்ல தண்ணீரும், இரண்டாவது குழாயில் தேவையில்லா நீரும் பிரித்து அனுப்பப்படும். நல்ல தண்ணீரானது நீர்சேமிப்பு தொட்டிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.  

ஸ்டெர்லைசிங்:

நீர்சேமிப்புத்தொட்டியில் உள்ள நீரில் ஒஸநேட்டர்(Ozonator) எனும் இயந்திரம் மூலம் ஒசோன் வாயு செலுத்தப்பட்டு கடினமான வேதிப்பொருட்கள், பாக்டீரியா, பூஞ்சை போன்றவை நீக்கப்படுகின்றன.

புறஊதாக்கதிர்கள் பயன்படுத்துதல்:

புறஊதாக்கதிர்களானது அல்ட்ரா வயலெட் பல்ப் இயந்திரம் மூலம் செலுத்தப்பட்டு நீரில் உள்ள வைரஸ் போன்றவை அழிக்கப்படுகிறது. 

இறுதி நிலை:

இறுதியாக பாட்டில்களில் நிரப்பும் இயந்திரத்துக்கு சுத்திகரிக்கப்பட்ட நீரானது எடுத்து செல்லப்பட்டு பாட்டிகளில் நிரப்பப்படும். சுத்திகரிக்கப்பட்ட நீரினை பாட்டிலுக்கு மாற்றுவதற்கென தனி அறை ஒதுக்க வேண்டும். மேலும் அவ்வறையானது குளிரூட்டப்பட்ட வசதி கொண்டதாக இருக்க வேண்டும்.

திறமையான மற்றும் சுறுசுறுப்பான பணியாளர்கள் கனிம நீராலையினை அமைப்பது எளிதாக இருப்பினும், அதனை திறம்பட தொடர்ந்து இயக்கி லாபம் ஈட்டுவதில் பணியாளர்களின் பங்கு முக்கியத்துவமானது. ஆதலால் நன்கு திறமையும் ஆற்றலுமிக்க பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி அவர்களைத் திறம்பட ஊக்குவிப்பது தொழில் முன்னேற்றத்திற்கான இரகசியமாகும்.

வாட்டர் பாட்டில் சப்ளையர்களுடன் இணைதல் 

உங்கள் கனிம நீர் ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட மினரல் வாட்டர் கேன்களை நேரடியாக நீங்களே சந்தைப்படுத்தலாம். நேரடி பயனாளர்களுக்கும் விற்பனை செய்யலாம். அதோடு மட்டுமில்லாமல், வாட்டர் பாட்டில் சப்ளையர்களைக் கண்டறிந்து, அவர்களுடன் இணைந்து தொழில் செய்யலாம். சப்ளையர்கள் நேரடி பயனாளர்களுக்கும் உங்களுக்குமிடையே ஒரு பாலமாக இருந்து தொழில் பெருக வழிசெய்வர். 

முடிவுரை

கனிம நீராலை ஆனது பலதரப்பட்ட நிலைகளில் நீரினை சுத்திகரிக்கும் ஒரு தொழிலாக இருந்தாலும் சுத்தமான குடிநீரை மக்களுக்கு வழங்கும் ஓர் உன்னதமிக்கது. மேலும் உங்கள் கனிம நீர் ஆலையின் மூலம் உங்கள் பகுதியில் பலதரப்பட்ட வேலைவாய்ப்புகளையும் உங்களால் உருவாக்கி தரமுடியும் என்பதும் திருப்தியளிப்பதாக இருக்கும். சுத்தமான குடிநீர் தேவை அதிகம் இருப்பதாலும், நீர் சார்ந்த அனைத்து தொழில்களும் சந்தையில் அதிக லாபம் ஈட்டுவதும் நிதர்சனமான உண்மை என்பதாலும், மினரல் வாட்டர் தொழிலில் இலாபம் கிடைப்பதிலும் மாற்று கருத்தில்லை. விரைவான மற்றும் உத்திரவாதமிக்க இலாபம் தரக்கூடிய இத்தொழில், தொழில் தொடங்க நினைப்பவர்களின் முதன்மை பட்டியலில் என்றுமே இடம் பிடிக்கிறது.  

Recent Posts