பொருளடக்கம்
- அறிமுகம்
- இயந்திரம் மூலம் ரெடிமேட் சப்பாத்தி செய்தல்
- ரெடிமேட் சப்பாத்தி தொழில் தொடங்க தேவையான முதலீடு
- சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரம்
- சப்பாத்தி தொழில் செய்ய தேவையான இடவசதி
- சப்பாத்தி தொழில் செய்ய பெற வேண்டிய உரிமங்கள்
- சப்பாத்தி தயாரிக்கும் முறை
- பேக்கேஜிங்
- சந்தைப்படுத்துதல்
- இலாபம்
- முடிவுரை
அறிமுகம்
நமது இந்தியாவில் ரெடிமேட் சப்பாத்தி தொழில் மிகவும் குறுகிய காலத்தில் இலாபம் ஈட்டி தரும் ஓர் சிறுதொழிலாக உள்ளது. சப்பாத்தி மிகவும் பரவலாக இந்தியா முழுவதும் உண்ணப்படும் ஓர் உணவாக உள்ளது. .
நார்ச்சத்து நிறைந்த ஒன்றாக இருப்பதால், எளிதில் செரிமானம் அடைய உதவும். இதில் உள்ள ஊட்டச்சத்துகள் காரணமாக, பலரும் குறிப்பாக இதய, சர்க்கரை நோயாளிகள் அதிக அளவில் தங்களது உணவில் சப்பாத்தியினை எடுத்து கொள்கின்றனர்.
உணவகங்கள், டிபன் கடைகள், அலுவலகங்களில் திறக்கப்படும் உணவகங்கள் போன்றவற்றிற்கு ரெடிமேட் சப்பாத்தியினை விநியோகம் செய்து நல்ல இலாபம் பார்க்கலாம். இத்தொகுப்பில் ரெடிமேட் சப்பாத்தி தொழில் செய்வது குறித்து விரிவாக காணலாம்.
இயந்திரம் மூலம் ரெடிமேட் சப்பாத்தி செய்தல்
வீடுகளில் நம் குடும்ப உறுப்பினர்களுக்கு உணவு தயாரிப்பது போல, ரெடிமேட் சப்பாத்தி தொழிலில் சப்பாத்தியினை நம் கைகளால் முழுவதும் செய்வது என்பது அதிக நேரம் எடுக்கும். அதுமட்டுமில்லாமல் அதிக வேலைப்பளு மற்றும் வேலையாட்களும் தேவைப்படும் ஒன்றாக அமைந்து விடும். என்றோ வீட்டு உபயோகத்திற்கே சப்பாத்தி தயாரிக்கும் சிறுஇயந்திரங்கள் வந்துவிட்ட நிலையில், தொழில் ரீதியாக ரெடிமேட் சப்பாத்தி செய்யவும் இயந்திரங்கள் உள்ளன.
இவ்வியந்திரங்கள் உட்பட ரெடிமேட் சப்பாத்தி தொழில் செய்வதற்கு தேவையானவைகள் என்னவென்று காணலாம்.
ரெடிமேட் சப்பாத்தி தொழில் தொடங்க தேவையான முதலீடு
சிறிய அளவிலான ரெடிமேட் சப்பாத்தி தொழிலினை, உங்கள் இல்லங்களில் தொடங்கும் போது ரெடிமேட் சப்பாத்தி செய்யும் இயந்திரத்தின் வாடகை, தொழிலாளர் கூலி, மூலப்பொருட்கள், இல்லத்தில் தேவையான இடம் ஒதுக்குதல் ஆகியவை தேவைப்படும். ஆதலால் இத்தகைய இல்லங்களில் தொடங்கும் சிறிய அளவிலான ரெடிமேட் சப்பாத்தி தொழிலுக்கு 3-4 இலட்சங்கள் வரை முதலீடு தேவைப்படும்.
பெரிய அளவில் சப்பாத்தி தயாரிக்கும் தொழில் செய்ய நீங்கள் விரும்பினால், 7-10 இலட்சம் வரை முதலீடு செய்ய வேண்டும். மேலும் குறைந்தபட்சம் ஆயிரம் சதுரஅடி கொண்ட இடம் தேவை.
சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரம்
பலவித இயந்திரங்கள், பல வேறுபட்ட வசதிகளுடன் கிடைக்கின்றன.
பிசைந்து உருட்டிய மாவில் இருந்து சப்பாத்தி தயாரிக்கும் தானியங்கி இயந்திரத்தினை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இதன் விலை இரண்டு இலட்சம் என்ற அளவில் இருக்கும். இதன் மூலம் தயாரிக்கப்படும் சப்பாத்தியின் விட்டம் மற்றும் தடிமனை நீங்கள் நிர்ணயிக்க முடியும்.
இந்த இயந்திரத்தோடு, மாவு பிசையும் மற்றும் உருண்டை பிடிக்கும் பிற இரு இயந்திரங்களும் நீங்கள் வாங்கிக்கொள்ளலாம். மாவு பிசையும் இயந்திரத்தின் விலை 27,000 முதல் 32,000 ரூபாய் வரை இருக்கும். மேலும் உருண்டை பிடிக்கும் இயந்திரத்தின் விலை 30,000 ரூபாய் வரை இருக்கும்.
இந்த இயந்திரங்களை உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள தயாரிப்பாளர்களிடம் இருந்து வாங்கிக் கொள்ளலாம். இல்லையேல் வணிக இணையதளங்களான இந்தியா மார்ட் போன்றவை மூலமும் வாங்கிக்கொள்ள முடியும்.
இயந்திரங்களின் உதவியால் ஒரு மணி நேரத்தில் ஆயிரம் சப்பாத்திகள் என மிக குறைந்த நேரத்தில் அதிக அளவில் சப்பாத்தி உற்பத்தி செய்து அதிக இலாபம் ஈட்ட முடியும்.
சப்பாத்தி தொழில் செய்ய தேவையான இடவசதி
சப்பாத்தி தயாரிக்கும் தொழிலுக்கு அதிக இடதேவை இருக்காது. நீங்கள் உங்கள் இல்லங்களிலே ஒரு இடத்தினை ஒதுக்கி தொழில் செய்து கொள்ள முடியும். நடுத்தர அளவு கொண்ட இயந்திரத்தினையே பயன்படுத்தும் போது, அந்த இயந்திரத்தினை வைப்பதற்கு 25 முதல் 50 சதுர அடி இடம் தேவைப்படும். அதோடு மட்டுமில்லாமல் தயார் செய்த சப்பாத்திகளை வைத்து பேக் (Pack) செய்வதற்கு 100 சதுர அடி இடம் தேவைப்படும்.
சப்பாத்தி தொழில் செய்ய பெற வேண்டிய உரிமங்கள்
எந்தவொரு தொழிலும் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியம். ஆதலால் உங்களது தொழிலைப் பதிவுசெய்து கொள்ளுங்கள்.
நீங்கள் MSME (Micro, Small & Medium Enterprises)-ன் கீழோ அல்லது Udyog Aadhaar-யின் கீழோ உங்களது தொழிலைப் பதிவுசெய்து கொள்ளுங்கள்.
இது மட்டுமில்லாமல், உங்களது பகுதியில் உள்ள உணவு மற்றும் ஆரோக்கியத்திற்கான அரசுத்துறையிடம் இருந்தும் உரிமம் பெற வேண்டும்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்திடம் (FSSAI – Food Safety and Standards Authority of India) இருந்தும் உரிமம் பெற வேண்டும். இது ஒரு சில மாநிலத்திற்கு வேறுபடலாம்.
ஒரு வணிகருக்கு தான் செய்யும் தொழில் சம்பந்தப்பட்ட உரிமங்கள் அனைத்து பெறுதல் மிக முக்கியமானது. குறிப்பாக சப்பாத்தி போன்ற உணவு விநியோகம் செய்யும் தொழிலில் ஈடுபடுவோர்களுக்கு, வாடிக்கையாளர்களிடம் நம்பகத்தன்மை பெறுவதற்கு இந்த உரிமங்கள் வழிவகுக்கும்.
சப்பாத்தி தயாரிக்கும் முறை
சப்பாத்தி செய்ய தேவையான ஒரே மூலப்பொருள் சப்பாத்தி மாவு. இதனை நீங்கள் உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள மளிகைக்கடையில் இருந்தோ, நேரடியாக அருகில் உள்ள மில்லில் இருந்தோ வாங்கி கொள்ளலாம். இணைய வணிக தளங்களில் ஆர்டர் செய்யும் போது உங்கள் இடத்திற்கே வந்து டெலிவரி செய்து கொடுப்பார்கள்.
சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரம், LPG கேஸ் மூலம் இயங்குகிறது. இதில் பல பர்னர்கள் உள்ளன. தீயின் அளவினை நீங்கள் கட்டுபடுத்த முடியும்.
முதலில் தேவையான அளவு மாவினை பிசைந்து, உருண்டைகளாக உருட்ட வேண்டும். மாவானது மிகவும் மென்மையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் சப்பாத்தி மென்மையாக இருக்கும்.
முன்பே இயந்திரங்கள் பகுதியில் கூறியது போல, மாவு பிசைவதற்கும் உருண்டைகளாக உருட்டுவதற்கும் என்று தனித்தனி இயந்திரங்கள் உள்ளன. அவற்றினை வாங்கியும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பின்னர் இந்த உருண்டைகளை, சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரத்தின் முதல் பகுதியில் வைத்து விட்டால், அதுவே வட்டமாக தேய்த்து, இயந்திரத்தின் அடுத்த பகுதியான இரண்டடுக்கு வேக வைக்கும் பகுதிக்கு எடுத்து செல்லும். அடுத்த பகுதியான கீழடுக்கில் அரைவேக்காடு வெந்து, மேலடுக்கிற்கு வரும், உப்பி வரும் போது கருக விடாமல் திருப்பி போட வேண்டும்.
பேக்கேஜிங்
வாடிக்கையாளரை சென்று அடையும் வரை, சப்பாத்தியின் தரம், சூடு, மென்மை ஆகியவற்றை உறுதி செய்ய பாய்ல் (foil) பேப்பரால் பேக் செய்து விற்பனை செய்வது சிறந்த முறையாக இருக்கும்.
சந்தைப்படுத்துதல்
தயாரிக்கப்படும் சப்பாத்திகளை எங்கு, எப்படி விற்பது என்பதும் மிகவும் முக்கியமான பகுதி. அதுவே சந்தைப்படுத்துதல் ஆகும். அருகில் உள்ள உணவகங்கள் (Restaurants), ஹோட்டல்கள், பள்ளி கல்லூரிகள் மருத்துவனைகள் அலுவலகங்கள் ஆகியவற்றில் இயங்கும் கேண்டீன்கள் ஆகியவற்றுடன் இணைந்து அவர்களின் தினசரி தேவைக்கு ஏற்ப சப்பாத்தி செய்து விநியோகிக்கலாம்.
திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும், கேட்டரிங் சேவை செய்பவர்களிடம் இருந்தும் ஆர்டர் எடுத்து செய்து கொடுக்கலாம்.
இணையவழி உணவு ஆர்டர் எடுத்து, டெலிவரி செய்யும் நிறுவனங்கள் உடனும் இணைந்து, அதன் மூலம் வரும் ஆர்டர்களுக்கு விநியோகம் செய்யலாம்.
இலாபம்
சப்பாத்தி தயாரிப்பில் இயந்திரத்தினைப் பயன்படுத்தும் போது, ஒரு மணி நேரத்தில் ஆயிரம் சப்பாத்திகள் தயார் செய்ய முடியும்.
ஒரு நாளைக்கு ஆறில் இருந்து எட்டு மணி நேரம் சப்பாத்தி தயாரிப்பில் ஈடுபட்டால், 6000 முதல் 8000 சப்பாத்திகள் வரை உற்பத்தி பண்ண முடியும்.
ஒரு சப்பாத்தியின் விலை கொள்முதல் செய்யப்படும் எண்ணிக்கை பொறுத்து குறைந்தபட்சம் இரண்டு ரூபாய் முதல் ஆறு ரூபாய் வரை இருக்கும்.
மூலப்பொருள்களுக்கான விலை, வேலையாட்களுக்கான கூலி உள்ளிட்ட செலவுகள் போக ஒரு சப்பாத்திக்கு குறைந்தபட்சம் ஒரு ரூபாய் முதல் மூன்று ரூபாய் வரை இலாபம் பார்க்க முடியும்.
முடிவுரை
இத்தொழில் ஆனது உணவு பொருள் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலாக உள்ளது. ஆதலால் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியம், உடல்நலம் கருதி, தயாரிப்பு நிலையில் சுகாதாரத்தை நிலைப்படுத்துதல், தயார் செய்யப்படும் சப்பாத்தியின் தரத்தை உயர்த்தும். அதோடு தரமான மாவும், மாவு பிசைய சுத்திகரிக்கப்பட்ட நீரினையும் பயன்படுத்துதல் முக்கியம்.
பேக்கிங் உள்ளிட்டவைகளிலும் நேர்த்தியை கடைபிடியுங்கள். சந்தைப்படுத்துதல் மற்றும் ஆர்டர்கள் எடுப்பதில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். உணவுபொருள் என்பதால் குறுகிய கால அளவில், விற்று விட வேண்டும். இல்லையேல் காலாவதி ஆகிவிடும். ஆதலால் தேவையை பொருத்து உற்பத்தியை செய்யுங்கள்.
குறிப்பிட்ட வயதிற்கு மேற்பட்டோரும், சர்க்கரை வியாதி உள்ளவர்களும் காலை மற்றும் இரவு உணவாக சப்பாத்தியினையே தேர்ந்து எடுத்து உட்கொள்கின்றனர். உணவு கட்டுபாட்டில் உள்ளவர்களின் பிரதான உணவாகவும் சப்பாத்தி உள்ளது. நார்ச்சத்து, ஊட்டச்சத்துகள் நிறைந்து இருத்தல் காரணமாகவும், மேலும் சந்தையில் இதற்கான தேவையும் அதிக அளவில் உள்ளதால், சப்பாத்தி அல்லது ரெடிமேட் சப்பாத்தி தயார் செய்யும் சிறுதொழில் ஆனது மிகவும் இலாபகரமான ஒன்றாக உள்ளது. இல்லத்தரசிகள் தாராளமாக எந்தவித இடையூறும் இன்றி இச்சிறுதொழிலினை எடுத்து செய்து நன்கு இலாபம் பார்க்க முடியும் என்பதில் ஐயமில்லை.