பொருளடக்கம்
- சூப்பர் மார்க்கெட் தொழில் தொடங்குவது எப்படி?
- சூப்பர் மார்க்கெட் தொழில் தொடங்க தேவையான பதிவுகள் மற்றும் உரிமங்கள்
- சூப்பர் மார்க்கெட் தொழிலுக்கு எவ்வளவு முதலீடு வேணும்?
- சூப்பர் மார்க்கெட்டிற்கான இடம் தேர்வு செய்தல்
- விற்பனைக்கான பொருட்கள்
- உள்கட்டமைப்பு வசதிகள்
- பணியாளர்கள்
- சூப்பர் மார்க்கெட் தொழிலுக்கான வியாபார உத்திகள்
- சூப்பர் மார்க்கெட் தொழில் செய்தால் எவ்வளவு இலாபம் கிடைக்கும்?
சூப்பர் மார்க்கெட் தொழில் தொடங்குவது எப்படி?
சில காலங்கள் முன்பு ஊர் சந்தை, வார சந்தை, புதன் சந்தை என அனைத்து ஊர்களிலும் இருக்கும். உங்களில் எத்தனை பேர் கேள்விப்பட்டு இருக்கிறீர்கள் என தெரியவில்லை. இன்றளவும் கிராமங்களில் சந்தைகள் கூடுகின்றன. இது போன்ற சந்தைகளில் அனைத்து வியாபாரிகளும் தங்களது பொருட்களை விற்க வருவார்கள். மக்களும் தங்களுக்கு தேவையான அனைத்து விதமான பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கி செல்ல இந்த சந்தைகளை தேடி வருவார்கள். ஒரே இடத்தில் தேவையான பொருள்கள் அனைத்தையும் ஒன்றாக ஒரே நேரத்தில் வாங்கி சென்று விடுவது வாடிக்கையாளர்களுக்கு வசதியாக இருக்கிறது. இதே காரணத்தால் தான் சூப்பர் மார்க்கெட் போன்ற டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களை நோக்கி மக்கள் அதிகம் செல்கின்றனர்.
இருபதாம் நூற்றாண்டின் இறுதி காலங்களில் பெரிய நகரங்களில் மட்டுமே காணப்பட்ட சூப்பர் மார்க்கெட், தற்போது அனைத்து சிறு நகரங்களிலும், கிராமப்பகுதிகளிலும் பரவி இருக்கிறது. மக்களின் அன்றாட தேவைக்கான பொருட்களை விற்பனை செய்யும் ஓர் தொழிலாக இருப்பதால் இதற்கான தேவை என்றும் உண்டு.
சரி. தேவை உள்ளது எனும்போது, இந்த தொழிலில் ஈடுபட என்ன செய்ய வேண்டும் என கேட்கிறீர்களா? முதலில் சரியான திட்டமிடல் வேண்டும். நீங்கள் சூப்பர் மார்க்கெட் திறக்க இருக்கும் சந்தை பகுதியினை நன்கு ஆராய வேண்டும். அங்கு கிடைக்கும் பொருட்கள் என்ன? அவற்றின் விலை என்ன? அவற்றினை விற்கும் கடைகளின் எண்ணிக்கை என்ன? ஆகிய அனைத்தையும் ஆராயுங்கள். பின்னர் தேவைப்படும் இடம், முதலீடு, விற்பனைக்கான பொருட்கள், பிற வசதிகள், சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
சூப்பர் மார்க்கெட் தொழில் தொடங்க தேவையான பதிவுகள் மற்றும் உரிமங்கள்
எந்தவொரு தொழிலையும் பதிவு செய்தல் கட்டாயம். ஒரு சிஏ (Chartered Accountant) உடன் ஆலோசித்து எந்த பிரிவின் கீழ் உங்களது நிறுவனத்தைப் பதிவு செய்வது உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என அறிந்து கொள்ளுங்கள். அதன்படி பதிவு செய்து கொள்ளுங்கள்.
உணவு பொருட்கள் தான் பெரும்பான்மையாக சூப்பர் மார்க்கெட்டில் விற்கப்படுவதால், FSSAI (Food Safety and Standard Authority of India) எனும் உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்திடம் இருந்து தரச்சான்று பெற வேண்டும்.
விற்பனை மற்றும் சேவைக்கென GST பதிவு செய்து, உங்கள் தொழிலுக்கான GST பதிவு எண்ணை பெற்று கொள்ளுங்கள்.
உங்கள் நிறுவனத்தின் பெயரில் நிறுவனத்திற்கான PAN கார்டிற்கு பதிவு செய்து PAN எண்ணை பெற்று கொள்ளுங்கள். வங்கி பரிவர்த்தனைகளுக்கு PAN எண் அவசியம்.
உங்களது நிறுவன பணவரித்தனைகளுக்கு, வங்கியில் current account வைத்து கொள்ளுங்கள்.
சூப்பர் மார்க்கெட் தொழிலுக்கு எவ்வளவு முதலீடு வேணும்?
முதலீடு என்பது நாம் விற்க தேர்வு செய்கிற பொருட்கள், கொள்முதல் அளவு, சூப்பர் மார்க்கெட் நடத்த தேர்வு செய்யும் இடம், அதற்கான வாடகை, பணியாளர்கள் சம்பளம், சூப்பர் மார்க்கெட் அமைக்க தேவையான அலமாரிகள் உள்ளிட்ட பொருட்கள், கம்யூட்டர்கள் மற்றும் அவற்றின் எண்ணிக்கை, பிற வசதிகள் என அனைத்தையும் பொருத்து மாறுபடும்.
தோராயமாக சூப்பர் மார்க்கெட் அமைக்க குறைந்தபட்சம் 15 இலட்சம் வரை முதலீடு தேவைப்படும்.
சூப்பர் மார்க்கெட்டிற்கான இடம் தேர்வு செய்தல்
சூப்பர் மார்க்கெட் அமைக்க நீங்கள் தேர்வு செய்யும் இடம், மக்கள் அதிகம் கூடுகின்ற, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்திற்கு அருகில் இருப்பது முக்கியம். உதாரணமாக, பேருந்து நிலையங்கள், சினிமா தியேட்டர்கள் போன்றவற்றின் அருகில், நகரின் முக்கிய வணிக பகுதியில் உங்களது சூப்பர் மார்க்கெட்டிற்கான இடத்தினை தேர்வு செய்யுங்கள்.
இடத்தின் அளவு என்பது நீங்கள் விற்பனை செய்ய தேர்ந்தெடுக்கும் பொருட்கள், எண்ணிக்கை பொருத்து மாறுபடும். சிறிய அளவிலான குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொடங்கப்படும் சூப்பர் மார்க்கெட்டிற்கு 500 சதுர அடி அளவில் இடம் தேவைப்படும்.
நகரங்கள், பெருநகரங்கள் போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் சூப்பர் மார்கெட் அமைக்க ஆயிரம் முதல் இரண்டாயிரம் சதுர அடி அளவில் இடம் தேவைப்படும்.
பார்க்கிங் வசதி இருத்தல் அவசியம். நடுத்தர மற்றும் வசதி படைத்த மக்கள் சூப்பர் மார்க்கெட்டிற்கு அதிகம் விரும்பி வருவதால், கார் மற்றும் டூவீலர் பார்க்கிங் வசதி அமைத்து கொடுப்பது அவசியம். நீங்கள் சூப்பர் மார்க்கெட் அமைக்க மக்கள் அதிகம் கூடும் வணிக பகுதிகளில் இடம் தேர்வு செய்வதோடு பார்க்கிங்கும் அமைத்து கொடுக்க வேண்டி இருப்பது தான் ஒரு சவாலான விஷயம். இன்றைய வணிக பகுதியில் உள்ள கட்டிடங்கள் பெரும்பாலும் தரைத்தளத்திலேயே விசாலமான பார்க்கிங் வசதி கொண்டிருக்கின்றன. அத்தகைய கட்டிடங்களை தேர்வு செய்யுங்கள். அதன் மூலம் கடைக்கு முன்போ அல்லது கடையை சுற்றியோ தனியாக பார்க்கிங்கிற்காக இடம் ஒதுக்க வேண்டி இருக்காது.
விற்பனைக்கான பொருட்கள்
சூப்பர் மார்க்கெட்டில் விற்கப்படும் பொருட்களின் பட்டியல் மிக நீளமானது. முக்கியமாக மளிகை சாமான்கள், காய்கறிகள், பழங்கள், வீட்டுஉபயோக பொருட்கள், அழகுசாதன பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், மாணவர்களுக்கு தேவையான ஸ்டேஷனரி பொருட்கள் போன்றவை முதன்மையாக விற்கப்படுகின்றன.
இந்த பொருட்கள் அனைத்தையும் நேரடியாக உற்பத்தியாளர்களிடம் இருந்தோ, மொத்த விற்பனை செய்பவர்களிடம் இருந்தோ, மலிவான விலைக்கு வாங்கி கொள்ளலாம்.
உள்கட்டமைப்பு வசதிகள்
சூப்பர் மார்க்கெட்டின் வியாபார உத்திகளில் ஒன்று, வாடிக்கையாளர்களே தங்களுக்கு வேண்டிய பொருட்களைத் தேர்வு செய்து எடுத்து கொள்ள வழி செய்வது தான். விற்பனைக்கான அனைத்து பொருட்களையும் வகைப்படுத்தி வாடிக்கையாளர்கள் எளிதில் எடுத்து பார்க்கும் வகையில் அலமாரிகளில் அடுக்கி வைக்க வேண்டும். ஆதலால் ஒவ்வொரு பிரிவிற்கும் பல அலமாரிகள் தேவைப்படும். அதற்கேற்றார் போல் விசாலமான இடமும் தேவைப்படும்.
வாடிக்கையாளர்கள் சென்று பார்க்கும் வகையில் தேவையான பாதைகள் அமைத்தப்படி இந்த அலமாரிகள் அடுக்கப்பட்டு இருக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவுகளையும் எளிதில் அடையாளம் காணும் வகையில் கடையின் உள்ளே எங்கு இருந்து பார்த்தாலும் தெரியும்படி பெரிதான அடையாள பலகைகள் (Signages) நன்றாக உயர்த்தி வைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
ஒவ்வொரு தளத்திலும் அல்லது பிரிவிலும் பில் போட கம்யூட்டர்கள், அதில் பில் போட தேவையான மென்பொருள் (Software), பில் அச்சடிக்கும் பிரிண்டர், பில் போடும் போது பொருட்களை ஸ்கேன் செய்ய தேவையான ஸ்கேனர்கள், மின்சார எடை போடும் இயந்திரம் (Weighing Scale) போன்றவைகளை வாங்கி வைக்க வேண்டும்.
பேக்கிங் பகுதி, டெலிவரி பகுதி தனியாக ஒதுக்கப்பட வேண்டும். உங்களது நிறுவன பெயர் போட்ட பேக் பயன்படுத்தினால் அதன் மூலமும் உங்களுக்கான விளம்பரத்தைத் தேடி கொள்ள முடியும். சிறியது முதல் பெரிய அளவிலான உங்களது நிறுவன விளம்பரம் போட்ட பேக்குகளை தேவையான அளவு ஸ்டாக் வைத்து கொள்ளுங்கள்.
பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக, பேப்பர் பேக், துணிப்பைகள் போன்றவற்றை பயன்படுத்துங்கள். உங்கள் நிறுவனத்தின் பெயர், விளம்பரம் போன்றவற்றை நீங்கள் பையில் அச்சிடவில்லை என்றால் பைகளுக்கான விலையினையும் நீங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கி கொள்ள முடியும்.
பணியாளர்கள்
சூப்பர் மார்க்கெட் தொழிலில் பணியாளர்களின் பங்கு மற்றும் அவர்களின் சேவை மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. வாடிக்கையாளர்கள் உங்கள் கடைக்கு வரும் போது, பார்க்கிங் பகுதிக்கு வழிகாட்டுதல் முதற்கொண்டு வாசலின் உள்ளே அவர்கள் நுழையும் போது அவர்களின் தேவையை கேட்டறிந்து அதற்கான பிரிவுக்கு வழிநடத்துவது, பொருட்களை எடுத்து பிரித்து காட்டுவது, ஆஃபர்கள் மற்றும் புதுவரவுகள் குறித்து அவர்களுக்கு தெரியப்படுத்துவது என இவை அனைத்துக்கும் பணியாளர்கள் தேவை. பில் போடும் இடங்களில், பொருள்களை பேக்கிங் செய்து கொடுக்கும் இடங்களில் என அனைத்து பகுதிகளிலும் உள்ள பணியாளர்களின் அன்பான, மரியாதையான அணுகுமுறை தான் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல அனுபவத்தை தரும். மீண்டும் மீண்டும் அவர்கள் கடைக்கு வர வழிவகையும் செய்யும். ஆதலால் அதற்கேற்றார் போல் பணியாளர்களுக்கு பயிற்சிகள், மீட்டிங்குகள் என தொடர்ந்து வழங்கி அவர்களை வழிநடத்தி வாருங்கள்.
சூப்பர் மார்க்கெட் தொழிலுக்கான வியாபார உத்திகள்
உங்கள் கடை பற்றி அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அறியும் வண்ணம் விளம்பரப்படுத்துங்கள். மக்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் திறப்பு விழா ஆஃபர்கள் அறிவியுங்கள். தினசரி பத்திரிக்கைகளில் துண்டு பிரசுரங்கள் அனுப்புங்கள்.
நகரின் முக்கிய பகுதிகளில் கண்ணை கவரும் விளம்பர பலகைகள் வையுங்கள். மக்கள் குடியிருப்பு பகுதிகளில் திறப்பு விழா ஆஃபர் குறித்து ஒலிபெருக்கி மூலம் வாகனங்களில் சென்று அறிவிக்கலாம்.
செலவு குறைந்ததும் எளிதில் மக்களை சென்றடைய கூடியதாகவும் உள்ள டிஜிட்டல் மார்கெட்டிங் மூலம் உங்கள் நிறுவனத்திற்கான விளம்பரத்தை தேடி கொள்ளுங்கள்.
ஆன்லைன் ஷாப்பிங் முறை அதிக அளவில் பெருகி இருக்கும் இக்காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய விரும்புகின்றனர். எனவே உங்களுக்கான இணையத்தளம், மொபைல் ஆப் அமைத்து ஆன்லைன் ஆர்டர் எடுத்து டோர் டெலிவரி செய்யுங்கள்.
இவ்வாறு காலத்திற்கு தகுந்தாற்போல் உங்கள் வியாபார வழிகளை அமைத்து கொள்ளுங்கள். நேரடியாக வந்து வாங்குபவர்களுக்கும் அதிக பொருட்கள் வாங்கி இருந்தால், அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப டோர் டெலிவரி செய்து கொடுங்கள்.
விழாக்காலங்களில் மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஆஃபர் கொடுங்கள். மாதந்தோறும் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் போன்ற ஆஃபர்கள் வழங்கிய வண்ணம் இருங்கள். இது மக்களின் வாங்கும் ஆர்வத்தை தூண்டும். குலுக்கல் முறையில் சில வாடிக்கையாளர்களை தேர்வு செய்து பரிசு வழங்கும் முறைகளும் நல்ல வரவேற்பினை பெறும்.
புதிய பிராண்ட்கள், உங்கள் பகுதிக்கு புதிதான பொருட்கள், அதிகம் மக்கள் வாங்காத பொருட்கள், புதுவரவுகள் போன்றவற்றை வாங்குவதில் மக்களுக்கு உள்ள தயக்கத்தினை போக்க, இலவச மாதிரிகள் வழங்குங்கள். மேலும் அவற்றினை சமைத்து கூட வாடிக்கையாளர்களுக்கு இலவச மாதிரியாக வழங்கலாம்.
பில் போடும் போது வாடிக்கையாளர்களின் மொபைல் எண் சேகரித்து, அவர்களை உறுப்பினராக உங்களது பில் போடும் மென்பொருளில் சேர்த்திடுங்கள். அவர்கள் வாங்கும் ஒவ்வொரு பில்லுக்கும் பாய்ண்ட்ஸ்கள் வழங்கி வாருங்கள். பாய்ண்ட்ஸ்களுக்கு இலக்குகள் அமைத்து, அதனை கடக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர்கள், தள்ளுபடிகள், பரிசுகள் என வழங்கி வாருங்கள்.
வார இறுதியில், விடுமுறை நாட்களில் குழந்தைகள், இளம் தலைமுறையினர்கள் மற்றும் குடும்பத்தினரை உங்களது கடையை நோக்கி ஈர்க்கும் வகையில், சிறுசிறு வேடிக்கையான இன்டோர் கேம்ஸ்கள் அடங்கிய போட்டிகள் நடத்துங்கள். உதாரணமாக ஆண்கள் மற்றும் குழந்தைகள் மளிகை பொருட்களை பார்த்து அவற்றின் பெயர்களை கூறும் போட்டி, லெமன் ஸ்பூன், இளம் தலைமுறையினருக்கான பாட்டு போட்டி, பெண்களுக்கான சிறிய அளவிலான சமையல் போட்டி உள்ளிட்டவைகளை நடத்தும் போது வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டத்தினை உங்கள் கடையினை நோக்கி வரவழைக்கும்.
எல்லா பிரிவுகளிலும் பொருட்களை வாங்கிய பின்னர், பெரும்பாலும் மக்கள் ஏதேனும் உணவு உண்பதில் விருப்பம் கொள்வர். சிலர் உணவு உண்பதற்கு கூட சூப்பர் மார்க்கெட் வருவது உண்டு. பெரும்பாலான சூப்பர் மார்க்கெட் கடைகளில் உணவு பிரிவானது பாஸ்ட் புட் உணவுகளால் மட்டுமே நிரம்பி வழியும். உங்கள் கடைகளில் புதுமையாகவும், மக்களின் ஆரோக்கியத்திலும் அக்கறை கொண்டு பழச்சாறு, சுண்டல், பீட்ஸாக்கு பதிலாக கம்பு திணை போன்றவற்றில் செய்த இனிப்பு கார தோசை, பணியாரம் என வழங்குங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஆரோக்கியமான உணவுகளை உங்களது மெனுவில் வையுங்கள். இது உங்களது சூப்பர் மார்க்கெட்டிற்கு நல்ல ஒரு தனித்தன்மை தேடி தரும். இளநீர், மோர் போன்றவற்றையும் விற்பனை செய்யுங்கள். பர்கருக்கு பதிலாக காய்கறிகள் கொண்டு ஸ்டப் செய்த சப்பாத்திகள் வழங்குங்கள். கொழுக்கட்டைகள், இடியாப்பம், கிழங்கு வகைகள் போன்ற பெரும்பாலும் ஹோட்டல்களில், உங்கள் பகுதியில் உள்ள பிற கடைகளில் கிடைக்காத உணவுகளை உங்களது மெனுவில் சேருங்கள்.
சூப்பர் மார்க்கெட் தொழில் செய்தால் எவ்வளவு இலாபம் கிடைக்கும்?
சூப்பர் மார்க்கெட் தொழிலில் இலாபம் பெறுவது என்பது நாம் விற்பனை செய்ய தேர்ந்தெடுக்கும் பொருட்கள், அவற்றினை சரியான கால இடைவெளியில் தேங்கி போகாமல் விற்று தீர்த்தல், நாம் கொள்முதல் செய்யும் பொருட்களிலும் சேதம் பெரிதும் இல்லாதபடி பார்த்து மொத்தமாக வாங்குதல், மார்கெட்டிங் என இவை அனைத்தையும் சரியாக செய்வதை பொருத்து தான் உள்ளது. சூப்பர் மார்க்கெட் தொழிலில் ஈடுபடுபவர்கள் 10 முதல் 15 சதவிகிதம் வரை இலாபம் பார்க்க முடியும். சூப்பர் மார்க்கெட் தொழிலிலுக்கான உத்திகளை சரிவர செய்து வந்தால் நல்ல இலாபத்தினை இத்தொழிலில் அடைய முடியும்.