பொருளடக்கம்
- மொத்த விற்பனை என்றால் என்ன?
- மொத்த விற்பனை தொழில் தொடங்க என்ன செய்ய வேண்டும்?
- தொழிலைப் பதிவு செய்தல்
- தேவையான உரிமங்களை வாங்குதல்
- விற்பனை செய்யவிருக்கும் பொருட்களைத் தேர்வு செய்தல்
- சேமிப்பு கிடங்கினை அமைத்தல்
- வியாபாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ளுதல்
- பணியாளர்களை நியமித்தல்
- மொத்த விற்பனை செய்ய ஏற்ற பொருட்கள்
- மொத்த விற்பனை தொழிலில் இலாபம்
மொத்த விற்பனை என்றால் என்ன?
நீங்கள் பயன்படுத்தும் எந்தவொரு பொருளும் எப்படி உங்களை வந்து சேர்கிறது என்று யோசித்து இருக்கிறீர்களா? எப்படியும் எந்தவொரு நிறுவனமும் அவர்களது உற்பத்தி ஆலையினை சில இடங்களில் மட்டுமே அமைக்க முடியும். எல்லா ஊர்களிலும் அமைக்க போவதில்லை. உற்பத்தி செய்பவர்களிடம் இருந்து என்றுமே பெரும்பாலும் நாம் நேரடியாக வாங்குவதில்லை. ஆனால் அனைத்து நிறுவன பொருட்களையும் நம் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் உள்ள சிறிய சந்தைகள், சிறுகுறு வியாபாரிகள், கடைகள் மூலம் நம் பயன்பாட்டுக்கு வாங்குகிறோம். உற்பத்தியாளர்களிடம் இருந்து நுகர்வோரை சென்றடையும் இந்த விற்பனை சங்கிலியின் ஒரு அங்கம் தான் இந்த மொத்த விற்பனையாளர்கள்.
உற்பத்தியாளர்கள் அனைவரும் நேரடியாக நுகர்வோர்களுக்கு பெரும்பாலும் விற்பனை செய்வது இல்லை. விற்பனைக்கு என்று உற்பத்தி செய்யப்படும் இடத்திலே ஒரு பகுதி அமைத்தாலும், அந்த பகுதியில் உள்ள நுகர்வோர்களுக்கு மட்டுமே விற்பனை செய்ய முடியும். பற்பல பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், நாடு முழுவதும் அல்லது உலகம் முழுவதும் தேவை உள்ள இடங்களுக்கு அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. உற்பத்தியாளர்களிடம் இருந்து நுகர்வோரை சேரும் இந்த விநியோக சங்கிலியில் வருபவர்கள் தான் விநியோகஸ்தர்கள் (Distributors), மொத்த விற்பனையாளர்கள் (Wholesalers), வியாபாரிகள் (Vendors), சில்லறை வியாபாரிகள் (Retailers) பின்னர் இறுதியாக நுகர்வோர்கள் (Consumers).
இந்த மொத்த விற்பனையாளர்கள் என்பவர்கள் உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கி சில்லறை வியாபாரிகள், பெரும் வியாபாரிகள், ஏன் நுகர்வோர்களுக்கு கூட விற்பனை செய்கின்றனர். உற்பத்தியாளர்கள் அவர்களுக்கென விநியோகஸ்தர்கள் வைத்து இருப்பார்கள். விநியோகஸ்தர்கள் உற்பத்தியாளர்களிடம் இருந்து குறிப்பாக குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு விநியோகம் செய்ய தேவையான அளவு பொருளைக் கொள்முதல் செய்து பெரிய சேமிப்பு கிடங்குகளில் நிரப்பி மொத்த விற்பனை செய்பவர்களுக்கு விற்பனை செய்வார்கள். விநியோகஸ்தர்கள் ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு ஒரு குறிப்பிட்ட உற்பத்தியாளருடன் ஒப்பந்தம் செய்துகொள்வர். ஆதலால் ஒரு குறிப்பிட்ட நிறுவன பொருளானது அந்த உற்பத்தி நிறுவனம் அமைந்து உள்ள பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட விநியோகஸ்தரிடம் இருந்து மட்டும் பெறும் நிலை இருக்கும்.
இவ்வாறு ஒரு குறிப்பிட்ட பொருளையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பொருளையோ நேரடியாக உற்பத்தியாளர்களின் நேரடி தொடர்பாக உள்ள விநியோகஸ்தர்களிடம் இருந்து வாங்கி தங்கள் பகுதிகளில் உள்ள வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், உள்ளூர் விநியோகஸ்தர்கள் போன்றோருக்கு மறுவிற்பனை செய்வது, ஏன் நேரடி நுகர்வோர்களுக்கு கூட விற்பனை செய்வது தான் மொத்த விற்பனை தொழிலாகும்.
மொத்த விற்பனை தொழில் தொடங்க என்ன செய்ய வேண்டும்?
குறைந்த விலையில் உற்பத்தியாளர்களிடம் இருந்து அதிக அளவில் மொத்தமாக வாங்கி, உங்களது சேமிப்பு கிடங்கில் வைத்து சில்லறை வியாபாரிகள், சிறுகுறு விநியோகஸ்தர்களுக்கு மறுவிற்பனை செய்யும் போது நீங்கள் தேர்வு செய்யும் பொருளைப் பொருத்து தொழிலின் தன்மை மற்றும் இந்த விநியோக சங்கிலியில் மாற்றமும் இருக்கும்.
தொழிலைப் பதிவு செய்தல்
தனியார் நிறுவனமாகவோ (Private Company), கூட்டுறவு நிறுவனமாகவோ (Partnership Firm) அல்லது பிற எந்த மாதிரி நிறுவனமாக பதிவு செய்வது என உங்களது முதலீடு மற்றும் பிற வசதிகளைக் கருத்தில் கொண்டு சிஏ போன்றோரிடம் இருந்து ஆலோசனை பெறுங்கள். அதற்கேற்றார் போன்று உங்கள் மொத்த விற்பனை செய்யும் நிறுவனத்தை முதலில் பதிவு செய்து கொள்ளுங்கள்.
தேவையான உரிமங்களை வாங்குதல்
நீங்கள் மொத்த விற்பனை செய்யும் பொருட்கள், அதனை வாங்கும் இடம் மற்றும் கொண்டு வரும் இடம் ஆகியவற்றை பொருத்து, அதற்கு தேவையான உரிமங்களைப் பெறுதல் அவசியம். அதனால் எந்தவித சட்டச்சிக்கலும் பின்னாளில் எதிர்கொள்ள வேண்டி இருக்காது.
விற்பனை செய்யவிருக்கும் பொருட்களைத் தேர்வு செய்தல்
மொத்த விற்பனை தொழிலுக்கு தேர்வு செய்யும் பொருளில் நல்ல கவனம் இருக்கணும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் முன்னர், சந்தை நிலவரம் பற்றி ஓர் ஆய்வினை செய்யுங்கள். சந்தையில் அதிக வரவேற்பும், தேவையும் உள்ள பொருட்கள் என்ன என்ற பட்டியலை எடுத்து, அதிலிருந்து உங்கள் மொத்த விற்பனை தொழிலுக்கான பொருளைத் தேர்வு செய்யுங்கள்.
ஏனென்றால் நீங்கள் மொத்த விற்பனையில் அதிக அளவில் ஒரு பொருளை கொள்முதல் செய்து இருப்பீர்கள். சந்தையில் அந்த பொருளுக்கான தேவையும் வரவேற்பும் இல்லையென்றால், நீங்கள் வைத்திருக்கும் அத்தனை பொருளையும் விற்க முடியாமல், உங்கள் சேமிப்பு கிடங்கிலே பொருட்கள் அனைத்தும் தேங்கி, தொழிலில் மந்த தன்மையும், தேங்கி இருக்கும் பொருளின் நிலைப்பு தன்மை (Expiry Period) பொருத்து பெரிய நஷ்டத்தையும் கூட ஏற்படுத்தி விடும்.
ஆதலால் உங்கள் மொத்த விற்பனை நிறுவனத்தில் நீங்கள் விற்பனை செய்ய விரும்பும் பொருள் அல்லது பொருள்களின் தேர்வில் அதிகம் கவனம் செலுத்துங்கள்.
சேமிப்பு கிடங்கினை அமைத்தல்
அதிக அளவில் வாங்கி விற்க போகிறீர்கள் என்பதால், வாங்கிய பொருட்களை போட்டு வைக்க, ஓர் கிடங்கு தேவை. நீங்கள் மொத்த விற்பனை செய்ய தேர்தெடுத்து இருக்கும் பொருட்களுக்கு தகுந்தாற் போல, கொள்முதல் செய்வதற்கு முன்பே சேமிப்பு கிடங்கினை முதலில் ரெடி பண்ணுங்கள்.
வியாபாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ளுதல்
உங்களது முதன்மையான வாடிக்கையாளர்களே உங்களது பகுதிகளில் உள்ள வியாபாரிகள் தான். ஆதலால் உங்கள் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வியாபாரிகளைத் தொடர்பு கொண்டு உங்களது நிறுவனத்தினை அறிமுகம் செய்து கொள்ளுங்கள். நீங்கள் விற்பனை செய்யும் பொருட்கள், அவற்றின் விலை, சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் என அனைத்தையும் அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
பணியாளர்களை நியமித்தல்
நம்பகமான, திறமையான பணியாளர்களை நியமியுங்கள். பண பரிவர்த்தனைகள், நீங்கள் கொள்முதல் செய்வோர்களிடம் இருந்து பொருட்களை சேதாரமின்றி தரம் பிரித்து வாங்குதல், நீங்கள் விநியோகிக்கும் விற்பனையாளர்களிடம் பொருட்கள் சரியாக சென்றடைதல், அவர்களுடனான பண பரிவர்த்தனைகள், வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றை நன்றாக கையாளும் பணியாளர்களைப் பணிக்கு அமர்த்துங்கள். அவர்களுக்கு தேவையான பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்குங்கள்.
மொத்த விற்பனை செய்ய ஏற்ற பொருட்கள்
மொத்த விற்பனை செய்ய ஏற்ற சில பொருட்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம். உற்பத்தியாளர்கள் இருக்கும் இடத்திற்கும், தேவை அதிகம் இருக்கிற இடத்திற்கும் உள்ள இடைவெளியை நிரப்பும் மொத்த விற்பனைக்கான இந்த பொருட்கள் மூலம் நல்ல இலாபம் பார்க்கலாம்.
- ஆடைகள் மற்றும் ஜவுளிகள்
- ஆட்டோமொபைல் பாகங்கள்
- அழகுசாதன பொருட்கள்
- விவசாய இயந்திரங்கள்
- ஃபர்னிச்சர்
- கெமிக்கல் நிறுவனங்களுக்கான பொருட்கள்
- வீட்டுஉபயோக பொருட்கள்
- நகைகள் மற்றும் விலையுயர்ந்த கற்கள்
- கட்டுமான பொருட்கள்
- கலை மற்றும் கைவினை பொருட்கள்
- மூலிகை மற்றும் ஆயுர்வேத பொருட்கள்
- புத்தகங்கள்
மொத்த விற்பனை தொழிலில் இலாபம்
நீங்கள் மொத்த விற்பனை செய்யும் பகுதியில் தேவை அதிகம் இருக்கிற பொருளைத் தேர்வு செய்து, அதிக அளவில் வாங்கினால் மிக குறைந்த விலைக்கு வாங்க முடியும். மேலும் விநியோகஸ்தர்கள் அல்லது உற்பத்தியாளர்களிடம் இருந்து தள்ளுபடிகள் மற்றும் பொருளுக்கு மிகவும் குறைவான விலை கிடைக்கும்.
உங்களது பிற செலவினங்களான போக்குவரத்து, கிடங்கிற்கான செலவுகள், பணியாளர்கள் சம்பளம் ஆகியவற்றை பொருத்து நீங்கள் மொத்த விற்பனை செய்யும் பொருளுக்கு விற்பனை விலையினை நிர்ணயம் செய்யுங்கள்.
விலை நிர்ணயம் செய்யும் போது, சந்தை நிலவரம், போட்டியாளர்களின் விலை ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு வியாபாரிகள் உங்களிடம் விரும்பி வந்து வாங்கும் வண்ணம் விலை நிர்ணயம் செய்யுங்கள்.
மொத்த விற்பனை தொழிலில் நீங்கள் வாங்கிய விலைக்கும் விற்பனை செய்யும் விலைக்கும் இடையே நல்ல இலாபம் பார்க்க முடியும். ஒரு சிறிய அளவிலான உதாரணமாக, டெல்லியில் உள்ள சதர் பஜார் ஓர் மொத்த விற்பனை சந்தையாக விளங்குகிறது. சில்லறை வியாபாரிகளால் நம் ஊரில் குறைந்தபட்சமாகவே 200 ரூபாயில் இருந்து 300 ரூபாய் வரை விற்கப்படும் பொருட்கள் இங்கே மொத்த விற்பனைக்கு மூன்று ரூபாய் முதல் 80 ரூபாய் அளவில் கிடைக்கும். இதிலிருந்தே நீங்கள் புரிந்து கொள்ளலாம், ஒரு பொருளுக்கு எவ்வளவு இலாபம் பார்க்க முடியும் என்று.
உற்பத்தியாளர்களுடன் ஒப்பிடும் போது, குறைந்த முதலீட்டில் மட்டுமில்லாமல் குறைந்த அளவிலான செலவினங்கள் மட்டுமே ஏற்படும் இந்த மொத்த விற்பனை தொழில், இலாபம் அதிகம் தரக்கூடிய ஒன்று. நீங்கள் புதிதாக தொழில் தொடங்க விரும்பினாலோ அல்லது உங்களது பிற தொழிலுடன் சேர்த்து குறிப்பிட்ட பருவத்தில் கிடைக்கும் பொருட்களை வாங்கி மொத்த விற்பனை செய்வதையும் ஓர் துணை தொழிலாக செய்ய விரும்பினாலோ, உங்களுக்கு ஏற்ற ஓர் தொழிலாக மொத்த விற்பனை தொழில் இருக்கும். மேலும் குறைந்த முதலீட்டில் குறைந்த நாளிலே நல்ல இலாபமும் அடையலாம்.